பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 125 தொலைத்தொடர்பு அலுவலகங்கள் இயங்கவில்லை


பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 125 தொலைத்தொடர்பு அலுவலகங்கள் இயங்கவில்லை
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-16T03:22:20+05:30)

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 125 தொலைத்தொடர்பு அலுவலகங்கள் இயங்கவில்லை

ஈரோடு,

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்டத்தில் உள்ள 125 அலுவலகங்கள் இயங்கவில்லை.

பி.எஸ்.என்.எல். வேலை நிறுத்தம்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு சொந்தமாக 65 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் நாடு முழுவதும் உள்ளன. இந்த பி.எஸ்.என்.எல். கோபுரங்கள் அனைத்தும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து செல்போன் கோபுரங்களை பிரித்து அதற்காக செல்டவர் துணை நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து 65 ஆயிரம் செல்போன் கோபுரங்களையும் பிரிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர். அதன்படி நேற்று போராட்டம் நடந்தது.

அலுவலகங்களுக்கு பூட்டு

ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டம் மிகவும் தீவிரமாக நடந்தது. ஈரோடு பொது மேலாளர் அலுவலகம், டெலிபோன் பவன் தொலைத்தொடர்பு அலுவலகம், ஈஸ்வரன் கோவில் வீதி தொலைத்தொடர்பு அலுவலகம் உள்பட அனைத்து பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. பொது மேலாளர் அலுவலகத்தில் துணைப்பொது மேலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது.

டெலிபோன் பவன் தொலைத்தொடர்பு அலுவலக வளாகத்தில் செல்போன் சிம் கார்டு சேவை மையம், வாடிக்கையாளர் சேவை மையம், கட்டண வசூல் மையம் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு பிரிவு அலுவலகங்களும் பூட்டு போட்டு மூடப்பட்டு இருந்தன. இதனால் கட்டணம் செலுத்த வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

வேலை இழக்கும் அபாயம்

போராட்டம் குறித்து ஈரோடு பி.எஸ்.என்.எல். மாவட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் எல்.பரமேஸ்வரன் கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிராமங்களை செல்போன்கள் மூலம் இணைக்கும் பாலமாக பி.எஸ்.என்.எல். கோபுரங்கள் மட்டுமே உள்ளன. தனியார் நிறுவனங்கள் இந்த அளவுக்கு கோபுரங்கள் அமைத்து இணைப்புகள் கொடுப்பது என்பது உடனடி சாத்தியம் இல்லை. எனவே பி.எஸ்.என்.எல். கட்டுப்பாட்டில் உள்ள செல்போன் கோபுரங்களை ஒரு தனியார் பொதுத்துறை துணை நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு சென்று அதன் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முடக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனம் செல்போன் மற்றும் பிராட்பேண்ட் இணைய சேவையை மட்டுமே நம்பி உள்ளது. தரைவழி இணைப்பு என்பது மிகக்குறைவான அளவிலேயே உள்ளது.

இந்தநிலையில் பி.எஸ்.என்.எல். கோபுரங்கள் தனி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்றால் பி.எஸ்.என்.எல். செயல்பாட்டுக்கான கட்டணத்தை புதிதாக தொடங்கப்படும் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் சுமார் 2 லட்சம் பணியாளர்கள், அதிகாரிகள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.

125 அலுவலகங்கள்

எனவே பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை பிரித்து துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியை கைவிடக்கோரி ஒரு நாள் முழு வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துகிறோம்.

இந்த போராட்டத்தில் ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்டத்தில் உள்ள 300 அதிகாரிகள், 900 ஊழியர்கள், 400 ஒப்பந்த பணியாளர்கள் என்று 1,600 பேர் பங்கேற்றுள்ளோம். இதனால் சேவை மையங்கள் தவிர 125 தொலைத்தொடர்பு அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story