குமரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்- ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நாகர்கோவிலில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


குமரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்- ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நாகர்கோவிலில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 15 Dec 2016 9:52 PM GMT)

குமரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்- ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நாகர்கோவிலில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்த போராட்டம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் உள்ள 65 ஆயிரம் செல்போன் கோபுரங்களை பிரித்து, துணை கோபுரங்கள் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் டிசம்பர் 15-ந்தேதி (நேற்று) ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி குமரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனம், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கம், அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கம் உள்பட பல சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம்

மேலும், கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆல்பர்ட்சிங் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க இந்திரா, ராஜூ, தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் ஜோசப், செல்லதுரை, விஜயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுபோல் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story