சுவைப் எந்திரத்தின் பயன்பாடு அதிகரிப்பு வங்கி அதிகாரி தகவல்


சுவைப் எந்திரத்தின் பயன்பாடு அதிகரிப்பு வங்கி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 15 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-16T03:23:09+05:30)

சுவைப் எந்திரத்தின் பயன்பாடு அதிகரிப்பு வங்கி அதிகாரி தகவல்

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் சுவைப் எந்திரத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதாக வங்கி அதிகாரி கூறினார்.

பணப்பிரச்சினை

நாட்டில் உபயோகத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட பணப்பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனையடுத்து மக்கள் தங்களிடம் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். டெபாசிட்டும் செய்தனர்.

மக்கள் தங்களது பணத்தை வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் போதுமான பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு, அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகையைகூட வங்கிகளால் வழங்க முடியாத நிலை இன்னும் இருந்து வருகிறது.

வங்கிகளில் கூட்டம்

இதனால் மக்கள் ஏ.டி.எம். மையங்களை தேடி செல்கிறார்கள். குமரி மாவட்டத்தில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில ஏ.டி.எம். மையங்கள் மட்டும் செயல்படுகின்றன. அதிலும் நாள் முழுவதும் பணம் இருப்பது இல்லை. குமரி மாவட்டத்தில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் நேற்றும் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வங்கிகளிலும் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நாகர்கோவில் வடசேரி ஸ்டேட் வங்கியில் பணம் எடுப்பதற்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இந்த பணத்தட்டுப்பாட்டுக்கு இடையே குமரி மாவட்டத்தில் ரொக்கமில்லா பணபரிவர்த்தனை சேவையான சுவைப் எந்திரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் மொத்த வியாபார கடைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சுவைப் எந்திரம், தற்போது காய்கறி கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. வங்கிகளில் சுவைப் எந்திரம் கேட்டு ஏராளமான வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

அதிகரிப்பு

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவாது:-

சுவைப் எந்திரத்தின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் இவற்றின் பயன்கள் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இருப்பினும் குமரி மாவட்டத்தில் சுவைப் எந்திரத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

சிறிய தொழில் நிறுவனத்தினர் மற்றும் வணிக நிறுவனத்தினர் சுவைப் எந்திரம் வாங்க விண்ணப்பித்துள்ளனர். தற்போது நாள் ஒன்றுக்கு 2-ல் இருந்து 5 பேர் வீதம் சுவைப் எந்திரம் பெற விண்ணப்பித்து வருகிறார்கள். இதில், காய்கறி கடைக்காரர்கள், பேக்கரி, சிறிய அளவிலான துணிக்கடைகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களும் அடங்குவர். விண்ணப்பித்த ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் சுவைப் எந்திரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

பாதுகாப்பு

சுவைப் எந்திரம் , விற்பனை அளவை அதிகரிப்பதற்கும், திருட்டு மற்றும் மோசடியை தடுக்கவும் உதவுகிறது. இதில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, மற்றும் வெளிநாட்டு கார்டுகளையும் பயன்படுத்தலாம். ரொக்க பணபரிவர்த்தனையை காட்டிலும், ரொக்கமில்லாத பணபரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story