வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மைனர் பெண்ணை கடத்தல் கும்பலிடம் கொத்தடிமையாக விற்க முயற்சி 4 பெண்கள் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மைனர் பெண்ணை கடத்தல் கும்பலிடம் கொத்தடிமையாக விற்க முயற்சி 4 பெண்கள் கைது
x
தினத்தந்தி 15 Dec 2016 11:43 PM GMT (Updated: 2016-12-16T05:13:07+05:30)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, மைனர் பெண்ணை கடத்தல் கும்பலிடம் கொத்தடிமையாக விற்பனை செய்ய முயன்ற 4 பெண்களை போலீசார் கைது செய்து உள்ளனர். வேலை வாங்கி தருவதாக... சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஒசமனே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் அந்தப்

சிவமொக்கா

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, மைனர் பெண்ணை கடத்தல் கும்பலிடம் கொத்தடிமையாக விற்பனை செய்ய முயன்ற 4 பெண்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக...

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஒசமனே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு தயாரிக்கும் வேலை செய்து வருகிறார். அதேப்பகுதியை சேர்ந்தவர் பாக்கியம்மா. இவரும் அதே பள்ளியில் உணவு தயாரிக்கும் வேலையை செய்து வருகிறார்.

இவர்கள் 2 பேரும் சேர்ந்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அந்தப்பகுதியை சேர்ந்த பெண்களிடம் கூறி வந்தார்கள்.

மைனர் பெண்

இந்த நிலையில் அந்த பள்ளியில் 15–வயது நிரம்பிய ஒரு மைனர் பெண் படித்து வந்தாள். அவள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். இதையறிந்த மஞ்சுளாவும், பாக்கியம்மாவும் அந்த மைனர் பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அப்பெண்ணின் பெற்றோரிடம் கூறினர்.

இதை உண்மை என நம்பிய மைனர் பெண்ணின் பெற்றோர், மஞ்சுளாவுடன் மைனர் பெண்ணை அனுப்பி வைத்தனர்.

தப்பி வந்தார்

இதையடுத்து மஞ்சுளாவும், பாக்கியம்மாவும் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மைனர் பெண்ணை மராட்டிய மாநிலம் புனேவுக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் புனேவை சேர்ந்த ஷாஹிதா பானு என்பவரை மஞ்சுளா சந்தித்து உள்ளார். அப்போது மஞ்சுளா, பாக்கியம்மா, ஷாஹிதா பானு ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த மைனர் பெண்ணை கொத்தடிமையாக விற்பனை செய்வது குறித்து உருது மொழியில் பேசி உள்ளனர். அவர்கள் பேசும்போது ஷாஹிதா பானுவின் தோழி அஸ்மத் பானு என்பவரும் உடன் இருந்தார்.

அவர்கள் பேசுவதை புரிந்து கொண்ட மைனர் பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து ரெயில் மூலம் பத்ராவதி வந்தடைந்தார். வீட்டிற்கு வந்த அந்த மைனர் பெண் தனது பெற்றோரிடம், வேலை வாங்கி தருவதாக கூறு என்னை கடத்தல் கும்பலிடம் கொத்தடிமையாக விற்க மஞ்சுளாவும், பாக்கியம்மாவும் சேர்ந்து முயன்றதாக கூறி கதறி அழுதார்.

கைது

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மைனர் பெண்ணின் பெற்றோர் இதுபற்றி ஒசமனே போலீசில் ஒரு புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்ராவதி பகுதியில் பதுங்கி இருந்த பாக்கியம்மாவையும், மஞ்சுளாவையும் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் புனேவுக்கு விரைந்து சென்ற போலீசார் ஷாஹிதாபானு மற்றும் அவரது தோழி அஸ்மத் பானு ஆகியோரையும் கைது செய்து பத்ராவதிக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story