வண்டலூர் உயிரியல் பூங்காவில் மரங்கள் விழுந்ததில் விலங்குகளுக்கு பாதிப்பா? மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 500 ஊழியர்கள் தீவிரம்


வண்டலூர் உயிரியல் பூங்காவில் மரங்கள் விழுந்ததில் விலங்குகளுக்கு பாதிப்பா? மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 500 ஊழியர்கள் தீவிரம்
x
தினத்தந்தி 16 Dec 2016 12:25 AM GMT (Updated: 16 Dec 2016 12:25 AM GMT)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் 500 ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மரங்கள் விழுந்ததில் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது இனி தான் தெரியவரும். 500 ஊழியர்கள் சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரி

வண்டலூர்,

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் 500 ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மரங்கள் விழுந்ததில் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது இனி தான் தெரியவரும்.

500 ஊழியர்கள்

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வார்தா புயல் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பூங்காவிற்கு சென்று ஆய்வு செய்தார். மரங்களை விரைவாக அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.

விழுந்த மரங்களை வெட்டுவதற்கு 10 நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. மரங்களை வெட்டும் பணியில் பூங்காவில் உள்ள நிரந்தர, ஒப்பந்த பணியாளர்கள் 375 பேர் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் உள்பட 500 பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஜே.சி.பி. எந்திரம் மூலமும் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றி வருகின்றனர்.

31 ஆண்டுகளில் முதல்முறை

இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பூங்கா தொடங்கப்பட்ட நாளில் இருந்து 31 ஆண்டுகளில் முதல் முறையாக புயலில் சிக்கி நாசமாகி உள்ளது. இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதுபோன்ற மரங்களை மீண்டும் வளர்க்க பல வருடங்கள் ஆகும். 21–ந் தேதி வரை பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்குள் மரங்களை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது முதற்கட்டமாக பூங்காவில் உள்ள சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் வாகனங்கள் மூலம் விலங்குகளுக்கு உணவு எடுத்துச் செல்லப்படுகிறது. மரங்கள் அகற்றப்படாத சாலைகளில் ஊழியர்கள் விலங்குகளுக்கு உணவுகளை தலையில் சுமந்து செல்கின்றனர்.

விலங்குகளுக்கு பாதிப்பா?

அடுத்தகட்டமாக சிங்கம், சிறுத்தை, வெள்ளை புலி, காட்டுமாடு, பறவைகள் கூண்டு, சிங்கம் உலாவிடம், மான்கள் உலாவிடம், யானை, நீர்யானை, பாம்பு இல்லம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, உட்சென்று காணும் பறவைகள் கூண்டு, கரடி உள்பட பல்வேறு விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள இருப்பிடங்கள் மீது விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி தொடங்கும்.

அப்போது தான் எந்த அளவிற்கு கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன என்பதும், விலங்குகளுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதும் தெரியவரும். இதேபோல பறவைகள் கூண்டின் மேல் விழுந்துள்ள மரங்களை முழுமையாக அகற்றிய பிறகுதான் எத்தனை பறவைகள் இறந்துள்ளது என்பதும் தெரியவரும்.

முதலைக்கு காயம்

இதுவரை ஒரு முதலைக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிந்துள்ளது. இதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதேபோல வண்டலூர்–கேளம்பாக்கம் சாலையில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு இல்லத்தில் உள்ள விலங்குகள் இருப்பிடங்கள் மீதும் மரங்கள் விழுந்துள்ளது. இந்த மரங்களை அகற்றிய பிறகு தான் மறுவாழ்வு இல்லத்தில் உள்ள விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதும் தெரியவரும்.

வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். பார்வையாளர்கள் முழுமையாக விலங்குகளை பார்க்க இன்னும் 2 மாதங்கள் ஆகலாம்.

இவ்வாறு பூங்கா அதிகாரி தெரிவித்தார்.

விலங்குகளை வெப்பம் தாக்கும்

ஏராளமான மரங்கள் விழுந்துவிட்டதால், இனிவரும் காலங்களில் பூங்காவில் உள்ள விலங்குகளை அதிக அளவு வெப்பம் தாக்கும் அபாயம் உள்ளது. மரங்கள் நிறைந்த சூழலில் வாழ்ந்த பல விலங்குகள் இனிமேல் இங்கு வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறைவாக உள்ளது. மேலும் பூங்காவிற்கு கோடை காலத்தில் வரும் பார்வையாளர்களும் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள்.

இனி மரங்கள் நிறைந்த பூங்காவாக பார்வையாளர்கள் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என தெரிகிறது.


Next Story