நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள் வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க கோரிக்கை


நெல்லையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள் வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Dec 2016 9:15 PM GMT (Updated: 2016-12-16T18:04:14+05:30)

நெல்லையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கருகிய நெற்பயிர்களுடன் கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கனகராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து அரசு அதிகாரிகளும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

வறட்சி மாவட்டமாக...

இதையடுத்து கூட்டம் தொடங்கியது. அப்போது, சுமார் 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருகிய பயிர்களை கையில் வைத்து இருந்தனர். அவர்கள் கலெக்டர் கருணாகரனை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறும் போது, “இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதால், சாகுபடி செய்த பயிர்கள் கருகி விட்டன. உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். போதிய மழை இல்லாததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கலெக்டர், பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யுங்கள். “இழப்பீடு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

செண்பகவல்லி அணை

செண்பகவல்லி நீர் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கலெக்டரை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதில், “சிவகிரி அருகே உள்ள செண்பகவல்லி தடுப்பணையை சிவகிரி ஜமீன் திருவிதாங்கூர் சமஸ்தான ஒப்புதலோடு கட்டினார். 1955–ம் ஆண்டு பெய்த கனமழையால் அணையில் உடைப்பு ஏற்பட்டது. அப்போது கேரள அரசு அனுமதியுடன், தமிழக அரசு ரூ.3¼ லட்சம் செலவில் அணையை சீரமைத்தது. 1960–ம் ஆண்டு செண்பகவல்லி தடுப்பணையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. அதை இதுவரை சரிசெய்யவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

டிராக்டர் ஜப்தி

தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய அணி மாநில செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில் சங்கரன்கோவில் விவசாயி ஆதிநாராயணன் என்பவருடைய டிராக்டரை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்ததை கண்டித்து, விவசாயிகள் மீண்டும் கலெக்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “திருவேங்கடம் அருகே உள்ள முக்கூட்டுமலையை சேர்ந்த ஆதிநாராயணன் என்ற விவசாயி கடந்த 2013–ம் ஆண்டு சங்கரன்கோவிலில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கி இருந்தார். ஒவ்வொரு மாதமும் தவணை செலுத்தி வந்தார். இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் கடந்த சில மாதங்களாக தவணை தொகை செலுத்த முடியவில்லை. வங்கி நிர்வாகம் ஆதிநாராயணன் டிராக்டரை ஜப்தி செய்தது. இதனால் அவர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவருக்கு எந்தவிதமான நிபந்தனையும் விதிக்காமல் டிராக்டரை மீட்டுத்தர வேண்டும். கடன் செலுத்துவதற்கான நிபந்தனையும் தளர்த்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வருகிற 22–ந் தேதி சங்கரன்கோவிலில் உள்ள வங்கி முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம்“ என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்று கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

வெங்காயம் அழுகியது

தொடர்ந்து கூட்டத்தில் விவாதம் நடந்தது. கீழப்பாவூரை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, கீழப்பாவூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்தார்கள். முளைத்த சிறிது நாட்களில் வெங்காயம் அழுகி விட்டது. அதனால் எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும். ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு தர வேண்டும்“ என்று கூறினர்.

முன்னதாக கலெக்டர் கருணாகரன், விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய உபகரணங்களை வழங்கினார். விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை முன்னிட்டு வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கு முன்பு முன்பு வேளாண் கருவிகள் விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

கூட்டத்தில், நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் பழனி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, நெல்லை உதவி கலெக்டர் பெர்மி வித்யா, தென்காசி உதவி கலெக்டர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story