ஜோலார்பேட்டை அருகே பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி அண்ணன், தம்பி சாவு


ஜோலார்பேட்டை அருகே பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி அண்ணன், தம்பி சாவு
x
தினத்தந்தி 16 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-16T18:22:29+05:30)

ஜோலார்பேட்டை அருகே பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி அண்ணன் – தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– அண்ணன் – தம்பி வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னாகவுண்டனூர் காந்திநகரை சேர்ந்தவர் முருகன். வெளி

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை அருகே பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி அண்ணன் – தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

அண்ணன் – தம்பி

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னாகவுண்டனூர் காந்திநகரை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு தனுஷ் (வயது 9), கமலஹாசன் (5) என 2 மகன்களும், கோபிகா (7) என்ற மகளும் உள்ளனர். அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனுஷ் 4–ம் வகுப்பும், கோபிகா 2–ம் வகுப்பும், கமலஹாசன் அங்கன்வாடி மையத்திலும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனுஷ், கமலஹாசன், கோபிகா மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவன் ஒருவன் ஆகிய 4 பேரும் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

தண்ணீரில் மூழ்கினர்

பின்னர் தனுஷூம், கமலஹாசனும் செங்கல் சூளை அருகில் பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் இறங்கி குளித்தனர். மேலே கோபிகாவும், பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவனும் அமர்ந்திருந்தனர்.

திடீரென தனுஷூம், கமலஹாசனும் தண்ணீரில் மூழ்கினர். இதனால் கோபிகாவும், சிறுவனும் வீட்டிற்கு சென்று நடந்ததை செண்பகத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து அவரும், உறவினர்களும் சென்று பள்ளத்தில் இறங்கி தண்ணீரில் தேடினர். சிறிது நேர தேடலுக்கு பிறகு அண்ணன்–தம்பி இருவரையும் பிணமாக மீட்டனர். அவர்களது உடல்களை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

சோகம்

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சரண்யா ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணன், தம்பி இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story