அன்வர்திகான்பேட்டை வழியாக 11 நாட்களாக பஸ்கள் இயக்காததால் நாற்காலியில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


அன்வர்திகான்பேட்டை வழியாக 11 நாட்களாக பஸ்கள் இயக்காததால் நாற்காலியில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-16T18:25:02+05:30)

அன்வர்திகான்பேட்டை வழியாக 11 நாட்களாக பஸ்கள் இயக்காததால் நாற்காலியில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூலித் தொழிலாளி கொலை அரக்கோணம் அருகே உள்ள மேல் ஆவதம் காலனி பகுதியை சேர்ந்த கூலித் தொ

அரக்கோணம்,

அன்வர்திகான்பேட்டை வழியாக 11 நாட்களாக பஸ்கள் இயக்காததால் நாற்காலியில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூலித் தொழிலாளி கொலை

அரக்கோணம் அருகே உள்ள மேல் ஆவதம் காலனி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி லோகேஷ் (வயது 33). இவர், கடந்த 4–ந்தேதி இரவு கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மின்னல் காலனி, மேல் ஆவதம் காலனி பகுதியில் வன்முறை ஏற்பட்டது. வன்முறையில் அந்த வழியாக சென்ற அரசு பஸ், தனியார் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து அந்த வழியாக சென்று வந்த அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவத்திற்கு பின்னர் அந்த வழியாக 6–ந்தேதி இரவு முதல் நேற்று வரை அரசு பஸ், தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

சாலை கிராமத்தில் இருந்து அன்வர்திகான்பேட்டை செல்லும் வழியில் நரசிங்கபுரம், மின்னல், அன்வர்திகான்பேட்டை, மாதிமங்கலம், குன்னத்தூர், மேல்களத்தூர், ராமாபுரம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமத்தில் உள்ள மக்கள் இந்த வழியாக செல்லும் பஸ்களை அதிகம் பயன்படுத்தி வேலைக்கு சென்று வருகின்றனர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் பஸ்சில் அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சென்னை, காஞ்சீபுரம், வேலூர், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரம் சம்பந்தமாகவும், வேலை சம்பந்தமாகவும், பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

சாலை மறியல்

மேலும் மின்னல், நரசிங்கபுரம் பகுதிகளில் உள்ள அரசினர் பள்ளிக்கு செல்ல அரசு பஸ்கள் வராததால் மாணவ, மாணவிகள் பஸ் பாஸ் வைத்திருந்தும் செல்ல முடியாமல் தினமும் பள்ளிகளுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் 11 நாட்கள் ஆகியும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், மேல்களத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் அருகே சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து நூதன முறையில் சாலை மறியல் செய்தனர். மேலும் அன்வர்திகான்பேட்டையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமங்களுக்கு கடந்த 11 நாட்களாக பஸ்கள் எதுவும் வரவில்லை. இதனால் எங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, உடனடியாக எங்கள் கிராமங்களுக்கு முன்பு போல அரசு பஸ்களையும், தனியார் பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் உங்கள் பிரச்சினை குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிய பின்னர் சாலை மறியல் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலைமறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story