நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் ராமநாதபுரத்தில் உப்பு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பரிதவிப்பு


நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் ராமநாதபுரத்தில் உப்பு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T18:44:48+05:30)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைபொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உப்புதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். மழை பொய்த்தது ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கமாக 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு வடகிழக்கு பருவமழை பொய்த்து வறட்சி ஏற்படுவது வழக்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைபொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உப்புதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

மழை பொய்த்தது

ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கமாக 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு வடகிழக்கு பருவமழை பொய்த்து வறட்சி ஏற்படுவது வழக்கம். இதுபோன்ற காலங்களில் விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் மழை பெய்யாமல் மற்ற நேரங்களில் மழைபெய்து நிலத்தடி நீர் மட்டம் பாதிக்காமல் இருந்து வந்தது. எப்போதாவது முழுமையாக மழை பொய்த்து நிலத்தடி நீர் ஆதாரமும் இல்லாமல் தண்ணீரின்றி வறட்சி தாண்டவமாடும் நிலை ஏற்படுவது உண்டு. வரலாற்றில் மறக்க முடியாத இதுபோன்ற நிலை ராமநாதபுரம் மாவட்டத்தில் பலமுறை ஏற்பட்டுஉள்ளது.

இதுபோன்ற சமயங்களினால்தான் தண்ணீரில்லா காடு, வறட்சி மாவட்டம், அதிகாரிகளை பழிவாங்கும் மாவட்டம் என்ற அவப்பெயர்கள் இந்த மாவட்டத்திற்கு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஆட்சியாளர்களின் ஆதரவு பார்வையினால் ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டம் என்ற அவப்பெயரில் இருந்து மாறி வந்த வேளையில் மீண்டும் பின்னோக்கி செல்லும் அளவிற்கு இயற்கை இந்த மாவட்டத்தை மீண்டும் வஞ்சித்து உள்ளது.

இந்த மாவட்டத்தின் ஒரே நீர் ஆதாரமான வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சிறிது அளவு கூட பெய்யவில்லை. முன்மழை, பின்மழை, மத்திய மழை என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்யாமல் பொய்த்து விட்டது.

குடிநீர்

கடும்புயல் ஏற்பட்ட போதிலும் இந்த பகுதியில் மட்டும் சொட்டு தண்ணீர் கூட மழையாக பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது என்று கூறும் அளவிற்கு ஒரு நாள் பெய்த மழையும் கடல்பகுதியில் பெய்து வீணாகி போனது. இந்த ஆண்டு மழைபெய்யாது என்று ஆரம்ப அறிகுறியிலேயே அறிந்து கொண்ட விவசாயிகள் அரசு வழங்கிய காப்பீடு திட்ட பயனை முழுமையாக அடைந்துகொள்ள தங்களின் பயிர்களை காப்பீடு செய்து தற்காத்து கொண்டனர்.

இவர்களின் நிலை இப்படி இருக்க பொதுமக்களின் நிலைதான் பரிதாபத்திலும் பரிதாபமாக மாறி உள்ளது. இதற்கு காரணம் நிலத்தடி நீர் ஆதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதுதான். ஆட்சியாளர்களின் கருணையால் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் இந்த மாவட்டத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு பெரிய அளவில் இல்லாமல் வறட்சி நிலை ஏற்படாமல் தாகத்தை தீர்த்து வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆண்டுதான் இந்த திட்டத்தின் பயனை மக்கள் மனதார நினைத்து பார்க்க தொடங்கி உள்ளனர். ஏனெனில், எங்கெங்கும் மழையின்றி வறட்சி நிலவும் வேளையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் குடிநீருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் மக்களின் நாவறட்சியை போக்கி வருகிறது.

உப்பு தண்ணீர்

குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லை என்று ஆறுதல்படுத்தும் அதேநேரத்தில் நேர்மாறாக அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தும் உப்பு தண்ணீருக்கு போட்டிபோடும் நிலை ஏற்பட்டுஉள்ளது. மழையில்லாமல் போனதாலும், நீர்ஆதாரங்கள் வறண்டுபோனதாலும் நீர்நிலைகளில் நீர் மட்டம் மணல் மற்றும் பாறைகள் தெரியும் அளவிற்கு அடிமட்டத்திற்கு சென்றுவிட்டது. கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் கல்,மண் தெரிகிறது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக கிணறுகளில் எட்டி அள்ளிவிடும் தூரத்தில் தண்ணீர் இருக்கும் நிலை மாறி கிணறுக்குள் இறங்கினாலும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுஉள்ளது. நீர்மட்டம் குறைந்ததால் பொதுமக்கள் உப்புதண்ணீருக்காக அலைந்து திரிந்து பரிதவித்து வருகின்றனர்.

இன்னும் சிலர் கிணறுகளை நம்பி இனி பயனில்லை என்று உணர்ந்து ஆழ்துளைகுழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுஉள்ளனர். வழக்கமாக 20 முதல் 25 அடி ஆழத்திலும், சில இடங்களில் 50 அடி ஆழத்திலும் ஆழ்துளை குழாய் அமைத்தால் தண்ணீர் வந்துவிடும் நிலையில் தற்போது மாவட்டத்தில் 100 அடி ஆழத்திற்கு ஆழ்துளை குழாய் அமைத்தாலும் தண்ணீர் வரவில்லை என்பதுதான் வேதனை. பல இடங்களில் வெறும் காற்றுதான் வருகிறது.

கூட்டுப்பிரார்த்தனை

இதனால் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு தண்ணீருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் அலைந்து திரிந்து பரிதவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற ஒரேநாள் இரவில் அடைமழை கொட்டித்தீர்த்து நிலத்தடி நீர் மட்டம் உயரவேண்டும். இதற்காக மாவட்ட மக்கள் வருண பகவானை வேண்டி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர்.


Next Story