கிழக்கு, மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


கிழக்கு, மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 16 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-16T19:14:08+05:30)

கிழக்கு, மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். மேட்டூர் அணை மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12–ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்

மேட்டூர்,

கிழக்கு, மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12–ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த பாசனத்தின் மூலம் 12 மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதேபோன்று கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் குறித்த நேரத்தில் பருவ மழை பெய்வதில்லை. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் நேரங்களில் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். இதனால் குறித்த நேரத்தில் டெல்டா மற்றும் கால்வாய் பாசனங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட சாதகமான சூழ்நிலை அமைவதில்லை.

தண்ணீர் திறக்கப்படுமா?

அதேபோல இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. அதற்கு மாறாக கடந்த செப்டம்பர் மாதத்தில் கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு, ஒரு சில வாரங்களுக்கு பிறகு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதேபோல டெல்டா பாசனத்திற்காக 3 மாதங்கள் கால தாமதமாக செப்டம்பர் மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 1934–ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்தே ஏற்கனவே 6 ஆண்டுகள் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த ஆண்டுடன் சேர்த்து 7–வது ஆண்டாக இதுவரை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கிழக்கு, மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இதற்கிடையில் கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறும் விவசாய பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து வருகிறது. இதனால் எதிர்வரும் காலங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என கால்வாய் பாசன விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 38.78 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 79 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


Next Story