தட்டுப்பாடு இல்லாத வகையில் வங்கிகள், ஏ.டி.எம்.களில் போதிய பணம் இருப்பு வைக்கக்கோரி வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


தட்டுப்பாடு இல்லாத வகையில் வங்கிகள், ஏ.டி.எம்.களில் போதிய பணம் இருப்பு வைக்கக்கோரி வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Dec 2016 10:30 PM GMT (Updated: 2016-12-16T19:54:44+05:30)

தட்டுப்பாடு இல்லாத வகையில் வங்கிகள், ஏ.டி.எம்.களில் போதுமான பணம் இருப்பு வைக்கக்கோரிய வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பொதுநல மனு மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி

மதுரை,

தட்டுப்பாடு இல்லாத வகையில் வங்கிகள், ஏ.டி.எம்.களில் போதுமான பணம் இருப்பு வைக்கக்கோரிய வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பொதுநல மனு

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

கடந்த மாதம் 8–ந்தேதி முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. புழக்கத்தில் உள்ள கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வரவும், அந்த பணத்தை ஒழிக்கவும் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், நல்ல வழியில் சம்பாதித்தவர்களின் பணத்துக்கு இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஆனால் அவரது அறிவிப்புக்கு நேர்மாறாக பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது பணத்தை வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் எடுக்க நாள் கணக்காக செலவிடும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. அவசரகால தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம். எந்திரங்கள் முன்பும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

ஒரு சில ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் இருப்பதால் அங்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும்போதே முதியவர்கள், நோயாளிகள் என பலர் உயிரிழப்பதும் தொடர்ந்து வருகிறது.

பணத்தை எடுக்கவும் பல்வேறு வரம்புகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வங்கி மற்றும், ஏ.டி.எம்.களில் போதுமான அளவு பணம் இருப்பில் இல்லை. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட அடிப்படை தேவைகள், கல்விக்கட்டணம், மருத்துவ செலவுகள் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் போதுமான அளவு பணத்தை இருப்பு வைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

பதில் அளிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், “இதுபோன்ற வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த பிரச்சினை நாடு முழுவதும் இருக்கிறது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஏ.செல்வம், “நான் கூட எனது சம்பளத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் உள்ளேன்” என்றார்.

பின்னர் இந்த மனு குறித்து மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்தமாதம்(ஜனவரி) 2–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story