கடையநல்லூர் அருகே ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த பாலிடெக்னிக் மாணவர் அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை


கடையநல்லூர் அருகே ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த பாலிடெக்னிக் மாணவர் அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Dec 2016 8:30 PM GMT (Updated: 2016-12-16T19:55:57+05:30)

கடையநல்லூர் அருகே ரத்தக் காயங்களுடன் பாலிடெக்னிக் மாணவர் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புளியங்குடி,

கடையநல்லூர் அருகே ரத்தக் காயங்களுடன் பாலிடெக்னிக் மாணவர் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிடெக்னிக் மாணவர்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் திரிகூடபுரம் சேர்மன் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகன் பிரகாஷ் (வயது 19). சொக்கம்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலின் முன்பு நின்று கொண்டு அவருடைய நண்பர்கள் சுரேஷ், அருண்குமார் உள்ளிட்ட 4 பேருடன் பிரகாஷ் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் கருப்பாநதி அணையை ஒட்டியுள்ள வயல் பகுதியில் ஆட்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள சேர்வாரன் கோவில் முன்பு வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுபற்றிய தகவல் ஊருக்குள் பரவியது. இதையடுத்து திரிகூடபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு இறந்து கிடப்பது பிரகாஷ் என தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயங்களுடன் பிணமாக கிடந்தார்

புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சொக்கம்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பிரகாஷ் தலைக்கு பின்னால் காயமும், உடலில் சிராய்ப்பு காயங்களும் உள்ளன. மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகி உறைந்த நிலையிலும் இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரகாஷ் எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. அடையாளம் தெரியாத வாகனம் ஏதேனும் மோதி, அவர் தூக்கி வீசப்பட்டு இறந்தாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் அவரை அடித்து கொலை செய்துவிட்டு உடலை இங்கு வீசிச் சென்றனரா? அல்லது அவரது நண்பர்களுக்குள் தகராறு எதுவும் நடந்ததா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக பிரகாசின் நண்பர்கள் சுரேஷ், அருண்குமார் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் பிரகாசின் மர்மச்சாவு பற்றி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story