தஞ்சையில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது


தஞ்சையில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 Dec 2016 5:52 PM GMT (Updated: 16 Dec 2016 5:52 PM GMT)

தஞ்சையில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் கடைகளில் கொள்ளை தஞ்சை விளார் சாலை, மேரீஸ்கார்னர், தலைமை தபால் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கடைகளுக்கு வந்த 3 மர்ம

தஞ்சாவூர்,

தஞ்சையில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

டாஸ்மாக் கடைகளில் கொள்ளை

தஞ்சை விளார் சாலை, மேரீஸ்கார்னர், தலைமை தபால் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கடைகளுக்கு வந்த 3 மர்ம நபர்கள் கடையில் இருந்த விற்பனையாளர்கள் சசிகுமார், ராஜ்குமார், பாலசுந்தர் ஆகியோரை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி விட்டு கடைகளில் இருந்த ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மற்றும் மதுபாட்டில்களையும் கொள்ளையடித்து சென்றனர்.

பணத்தை கொள்ளையடித்து விட்டு மோட்டார்சைக்கிளில் சென்ற மர்ம நபர்கள் சாலையில் மதுபாட்டில்களை உடைத்து போட்டவாறு பொதுமக்களுக்கு இடையூறு செய்தபடி சென்றனர். தொம்பன்குடிசை பகுதியில் சென்ற போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, குமார் ஆகியோர் பிடிக்க முயன்ற போது அவர்களை மர்ம நபர்கள் கத்தி, அரிவாளால் தாக்கினர். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 பேரும் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

3 பேர் கைது

இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்த 3 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். 2 பேர் பிடிபட்டனர். பிடிபட்ட 2 பேரையும் பொதுமக்கள் சரமாரி அடித்து உதைத்து தஞ்சை கிழக்குப்போலீசில் ஒப்படைத்தனர். மேலும் பொதுமக்கள் தாக்கியதில் 2 கொள்ளையர்கள் காயம் அடைந்தால் அவர்கள் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிடிபட்ட 2 கொள்ளையர்கள் தஞ்சை விளார் சாலையை சேர்ந்த குமார் மகன் சூர்யா (வயது22), பர்மாகாலனியை சேர்ந்த குப்புசாமி மகன் தமிழ்வாணன் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியது நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த தங்கப்பன் மகன் விக்னேஷ் (25) என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் விக்னேஷையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் மீன் வெட்டும் தொழிலாளர்கள் ஆவர். மேலும் அவர்கள் பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story