500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-16T23:28:19+05:30)

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் சீர்காழியில், பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்

வாய்மேடு,

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றினர். ஆனால் வங்கியில் போதிய அளவு புதிய நோட்டுகள் இல்லாததால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதேபோல் மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களும் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வங்கிகளிலும் போதிய அளவு பணம் இல்லை என்று கூறுவதால் பொதுமக்கள் வங்கி வாசலில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நாகை மாவட்டம் வாய்மேடு கடைத்தெருவில் செயல்படாமல் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் தேவையான பணத்தை வைக்கக்கோரியும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய மோடி அரசு நாடு முழுவதும் கருப்பு பணத்தையும், லஞ்சத்தையும் ஒழிப்பேன் என்று கூறி திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து சாதாரண மக்களையும் கூலி தொழிலாளிகளையும் வஞ்சிக்கிற போக்கை கைவிட வேண்டும். நாட்டை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். சாதாரண ஏழை மக்கள் 2 ஆயிரம் ரூபாய்க்காக நாள் முழுக்க வரிசையில் நின்று உயிர் நீத்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். பெரும் முதலாளிகளுக்கு மறைமுகமாக உதவி செய்து விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட குழு உறுப்பினர் அம்பிகாபதி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வெற்றியழகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருக்குவளை

இதேபோல் திருக்குவளை ஸ்டேட் பேங்க் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கீழையூர் ஒன்றிய குழு சார்பில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்தும், தகுந்த ஏற்பாடுகள் செய்யும்வரை 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்ல தக்கதாக அறிவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காத்தமுத்து கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வைரன், விவசாய சங்க தலைவர் ராமலிங்கம், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுஜாதா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், திருக்குவளை செயலாளர் (பொறுப்பு) கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகை

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாகை ஒன்றியம், நாகை நகரம், திருமருகல் ஒன்றியம் ஆகிய கிளைகள் சார்பில் நேற்று நாகையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருமருகல் ஒன்றிய செயலாளர் ஜெயபால், நாகை நகர செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சீனி.மணி பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மாரிமுத்து கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், தேவிகா, கட்சியை சேர்ந்த கிருஷ்ணன், தோழமை சங்க நிர்வாகிகள் ஜீவாராமன், வடிவேல், ராஜா, செல்வராஜ், சிவக்குமார், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குத்தாலம்

இதேபோல குத்தாலம் அருகே நக்கம்பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குத்தாலம் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தற்போது அத்தியாவசிய தேவைகளை பொதுமக்கள் நிறைவேற்றி கொள்ள சிரமப்படுவதால், மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை பழைய ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் துரைராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய விவசாயிகள் சங்க செயலாளர் பரமானந்தம், ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் விஜயகாந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story