மார்கழி மாத பிறப்பையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனிதநீராடினர்


மார்கழி மாத பிறப்பையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனிதநீராடினர்
x
தினத்தந்தி 16 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-16T23:29:51+05:30)

மார்கழி மாத பிறப்பையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். சுவேதாரண்யேஸ்வரர் கோவில் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான 6 கோவில்களில் ஒன்

திருவெண்காடு,

மார்கழி மாத பிறப்பையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்

திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் காசிக்கு இணையான 6 கோவில்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள ருத்ர பாதத்தில் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டால் 21 தலைமுறைகளில் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய 3 பொறிகள் சூரியன், சந்திரன், அக்னி என முக்குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த முக்குளங்களில் ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பு மற்றும் அமாவாசை அன்று அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

தீர்த்தவாரி

நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி முக்குளங்களிலும் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி காலை அஸ்திர தேவரை மூன்று குளங்களுக்கும் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் அஸ்திர தேவருக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர், மஞ்சள்பொடி, திரவியபொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முக்குளங்களிலும் வேத மந்திரங்கள் முழங்க அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது கோவில் நிர்வாக அதிகாரி முருகையன், கணபதி சாமிகள், பேஸ்கார் திருஞானம், கோவில் தலைமை அர்ச்சகர் கந்தசாமி சிவாச்சாரியார், 63 நாயன்மார்கள் வழிபாட்டு மன்ற தலைவர் பாபு மற்றும் திரளான பக்தர்கள் முக்குளங்களிலும் புனித நீராடினர்.


Next Story