உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 34 போர் விமானங்கள் தாங்கிய கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் துணை தளபதி சுரேந்திர அகுஜா தகவல்


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 34 போர் விமானங்கள் தாங்கிய கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் துணை தளபதி சுரேந்திர அகுஜா தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2016 11:00 PM GMT (Updated: 16 Dec 2016 6:38 PM GMT)

‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 34 போர்விமானங்கள் தாங்கிய போர்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது’ என்று கடற்படை போர்க்கப்பல் தயாரிப்பு பிரிவு துணை தளபதி சுரேந்திர அகுஜா தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா வேலூர் மாவட்டம், அரக்கோணத்த

அரக்கோணம்,

‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 34 போர்விமானங்கள் தாங்கிய போர்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது’ என்று கடற்படை போர்க்கப்பல் தயாரிப்பு பிரிவு துணை தளபதி சுரேந்திர அகுஜா தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளம் உள்ளது. இங்கு ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி உள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு இந்த மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பயிற்சி பெறும் வீரர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

ஐ.என்.எஸ். ராஜாளி விமானதள வளாகத்தில் 87–வது குழுவிற்கான ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கடற்படை போர்க்கப்பல் தயாரிப்பு பிரிவு துணை தளபதி சுரேந்திர அகுஜா கலந்து கொண்டார். பின்னர் அவர், திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.

இதனையடுத்து பயிற்சியை நிறைவு செய்த 11 கடற்படை வீரர்கள், 5 கடலோர காவல்படை வீரர்கள் என மொத்தம் 16 வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் மற்றும் அனைத்து பயிற்சிகளிலும் சிறந்து விளங்கிய லெப்டினன்ட் ரிஷப் துத்தாவிற்கு கேரளா கவர்னரின் சுழற்கோப்பை ஆகியவற்றை கடற்படை போர்க்கப்பல் தயாரிப்பு பிரிவு துணை தளபதி சுரேந்திர அகுஜா வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

வீரர்களுக்கு வாழ்த்து

இந்திய கடற்படை மிகவும் வலிமை பெற்றதாக திகழ்ந்து வருகிறது. இந்திய கடற்படையை மேலும் பலப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்று கடற்படை துறையை தேர்ந்தெடுந்து பயிற்சியை நிறைவு செய்து உள்ள உங்களையும், இதற்கு உறுதுணையாக இருந்த உங்கள் பெற்றோர்களையும் பாராட்டுகிறேன். 21 வார கால பயிற்சியை சிறப்பாக முடித்து உள்ளீர்கள்.

பயிற்சியில் கற்று கொடுத்ததை நாட்டின் பாதுகாப்பிற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். நம்முடைய ஒவ்வொரு செயல்களும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும். நாட்டில் எந்த மாநிலத்திலும் பணியில் இருந்தாலும் நமக்கு கொடுக்கப்படும் பணிகளை மிகவும் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு பணியிலும் உங்களின் தனித்திறமையை காட்டி நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களின் பணி சிறக்க நான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட...

இந்திய கடற்படையில் 2004–ம் ஆண்டு 12 புதிய பி8ஐ என்ற போர்விமானம் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் 8 பி8ஐ போர் விமானங்கள் வாங்கப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் 4 பி8ஐ போர் விமானங்கள் விரைவில் வாங்கப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. உள்நாட்டில் போர்க்கப்பலை தயாரிக்க மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 34 போர்விமானங்கள் தாங்கிய போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு முடியும் நிலையில் உள்ளது. 2018–ம் ஆண்டிற்குள் இந்திய கடற்படையில் அந்த போர்க்கப்பல் சேர்க்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படும்.

வருங்காலத்தில் 54 போர்விமானங்கள் தாங்கிய போர்க்கப்பல் தயாரிப்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி பெற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அனுமதிக்கு பின்னர் அதற்கான பணிகளும் தொடங்கும். மேலும் இந்திய கடற்படைக்கு புதிதாக 12 டார்னியர் விமானங்களும், 16 நவீனமயமான ஹெலிகாப்டர்களும், 16 பன்முகதிறன் கொண்ட ஹெலிகாப்டர்களும் வாங்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதனால் நாட்டின் பாதுகாப்பு பணியில் கடற்படை, கடலோர காவல்படையின் பணி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதள கமாண்டன்ட் வி.கே.பிஷாரோடி, மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கமாண்டன்ட் பி.செந்தில், உதவி கமாண்டன்ட்கள், கடற்படை, கடலோர காவல்படை பைலட்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story