பணத் தட்டுப்பாடு எதிரொலி: வங்கி, ஏ.டி.எம். மையங்களில் மக்கள் முற்றுகை


பணத் தட்டுப்பாடு எதிரொலி: வங்கி, ஏ.டி.எம். மையங்களில் மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 16 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-17T00:29:45+05:30)

பணத் தட்டுப்பாடு எதிரொலியாக வங்கி, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க மக்கள் முற்றுகையிட்டனர். பணத் தட்டுப்பாடு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர், பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. வங்கிகளில் தினமும் ரூ.10 ஆயிரமும், ஏ.டி.

திண்டுக்கல்

பணத் தட்டுப்பாடு எதிரொலியாக வங்கி, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க மக்கள் முற்றுகையிட்டனர்.

பணத் தட்டுப்பாடு

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர், பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. வங்கிகளில் தினமும் ரூ.10 ஆயிரமும், ஏ.டி.எம். மையங்களில் ரூ.2 ஆயிரமும் மட்டுமே எடுக்க முடிகிறது. அதிலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கிகளில் ரூ.5 ஆயிரம் கொடுப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அந்த தொகையிலும் பாதிக்கு மேல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படுகின்றன.

மேலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலான வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதன் விளைவாக பண தட்டுப்பாட்டுடன், சில்லறை தட்டுப்பாடும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. பழைய நோட்டுகள் செல்லாது என அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்ட நிலையில், தேவையான பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

முற்றுகை

வீட்டு வாடகை, அத்தியாவசிய செலவு, அவசர மருத்துவ செலவு போன்றவற்றுக்கு கிராமப்புற மக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாத தொடக்கத்தில் பணம் எடுக்காத மக்கள் எல்லாம் தற்போது தவிர்க்க முடியாமல் வங்கிகளை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர். இதனால் நேற்று திண்டுக்கல்லில் பெரும்பாலான வங்கிகளில் மக்கள் முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.

சில வங்கிகளின் முன்பு காலை 9 மணிக்கே வந்து மக்கள் வரிசையில் காத்திருந்த அவலமும் நடந்தது. அதிலும் குறிப்பிட்ட சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. இதற்கிடையே நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புற பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களும் செயல்படவில்லை. கிராமப்புற மக்கள் பணம் எடுப்பதற்காக நகரங்களுக்கு வருகின்றனர். இதன் காரணமாக திண்டுக்கல்லில் நேற்று செயல்பாட்டில் இருந்த அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மயங்கி விழுந்த பெண்

இதே போல் நத்தம் தாலுகா செந்துறையில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது வரிசையில் நின்ற பெண் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. விசாரணையில் அவர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அழகர் என்பவரது மனைவி ராமாயி (வயது 30) என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story