வங்கி முன்பு காத்துக்கிடந்த பொதுமக்கள்; பணம் வழங்காததால் முற்றுகை


வங்கி முன்பு காத்துக்கிடந்த பொதுமக்கள்; பணம் வழங்காததால் முற்றுகை
x
தினத்தந்தி 17 Dec 2016 11:00 PM GMT (Updated: 17 Dec 2016 12:59 PM GMT)

புதுமடம் வங்கி முன்பு காத்துக்கிடந்த பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படாததால், அவர்கள் வங்கியை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புகார் மண்டபம் யூனியன் புதுமடத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் தாமரைக்குளம், ரெ

பனைக்குளம்,

புதுமடம் வங்கி முன்பு காத்துக்கிடந்த பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படாததால், அவர்கள் வங்கியை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புகார்

மண்டபம் யூனியன் புதுமடத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் தாமரைக்குளம், ரெட்டையூருணி, வெள்ளரிஓடை, புதுமடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் 15,000–க்கும் மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு தொடங்கி பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. அரசு அறிவித்தபடி பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்றால் அங்கு பணம் இருப்பு இல்லை என்று வங்கி அதிகாரிகள் ரூ.2,000 மட்டும் வாங்கிச்செல்லுங்கள் என்று கூறியதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

பணம் இருப்பு இல்லை

இந்த நிலையில் நேற்று காலை 200–க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி திறப்பதற்கு முன்பாகவே நீண்ட வரிசையில் பணம் எடுக்க காத்துக்கிடந்தனர். ஆனால் வங்கி திறக்கப்பட்டு நீண்டநேரமாகியும் வாடிக்கையாளர்களுக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் எப்போது பணம் தருவீர்கள் என்று வங்கி அதிகாரிகளிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், தற்போது வங்கியில் பணம் இருப்பு இல்லை என்றும், யாராவது டெபாசிட் செய்தால் நாங்கள் உங்களுக்கு டோக்கன் முறையில் பணம் வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு பணம் வழங்க வலியுறுத்தினர். இதையடுத்து வங்கி மேலாளர் உச்சிப்புளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும் வங்கி மேலாளரிடம் வாடிக்கையாளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.

பாதுகாப்பு

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறியதாவது:– நாங்கள் வசிக்கக்கூடிய இந்த பகுதியில் ஒரே ஒரு வங்கி மட்டுமே உள்ளது. எங்கள் பணத்தை எடுக்க இங்குதான் வரமுடியும். வேறு வங்கிக்கு சென்று எடுக்க முடியாது. இந்த சூழ்நிலையில் இந்த வங்கிக்கு மட்டும் பணம் வரவில்லை என்று கூறுவது எங்களுக்கு வியப்பாக உள்ளது. எங்களது கணக்குகளை முடித்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்தால் நாங்கள் வெளியூரில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்து கொள்வோம். எங்களிடம் பணம் இல்லாததால் ரூ.2,000–மாவது தாருங்கள் என்று கேட்டால் அதற்கும் இருப்பு இல்லை என்று கூறுவது சரியல்ல.இதற்கு உயர் அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பொதுமக்களின் முற்றுகையை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.


Next Story