வங்கியில் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரம் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


வங்கியில் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரம் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2016 9:00 PM GMT (Updated: 17 Dec 2016 1:08 PM GMT)

சங்கரன்கோவிலில் வங்கியில் பணம் இல்லை என்று வங்கி அதிகாரிகள் கூறியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவிலில் வங்கியில் பணம் இல்லை என்று வங்கி அதிகாரிகள் கூறியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலையில் இருந்தே காத்து இருந்த பொதுமக்கள்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்–ராஜபாளையம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் தாலுகா முழுவதும் உள்ள பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பென்சன்தாரர்கள், வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கியில் எப்பொழுதும் கூட்டம் அதிக அளவிலே காணப்படும். தற்போது, ரூபாய் நோட்டு பிரச்சினையால் ஏராளமான பொதுமக்கள் வங்கியில் காத்து கிடந்து பணத்தை எடுத்துச் செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை வங்கி திறப்பதற்கு முன்பே பொதுமக்கள் மற்றும் வயதான பெண்கள் வங்கியில் பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். காலை 10 மணி அளவில் வங்கி திறக்கப்பட்டது. அப்போது முதலில் நின்ற சிலர் மட்டும் வங்கியின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது.

சாலை மறியல்...

வரிசையில் நின்ற மற்றவர்களுக்கு வங்கியில் பணம் இல்லையென்றும், அவர்களை உள்ளே செல்ல வங்கி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை கேட்ட பொது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வங்கியின் முன்பு முற்றுகையிட்டு, பின்னர் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, சில நபர்களுக்கு மட்டும் வங்கி அதிகாரிகள் பணம் கொடுத்து அனுப்பி வைப்பதாக போலீசாரிடம் பொதுமக்கள் முறையிட்டனர். போலீசாரின் தலையீட்டின் பேரில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வங்கி அதிகாரிகள் டோக்கன் வழங்கி அவர்களை திங்கட்கிழமை வருமாறு அனுப்பி வைத்தனர்.

Next Story