தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டில் 2.40 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு கலெக்டர் விவேகானந்தன் தகவல்


தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில்  நடப்பாண்டில் 2.40 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு கலெக்டர் விவேகானந்தன் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-17T18:44:48+05:30)

தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்தார். கரும்பு அரவை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா திம்மனஅள்ளியில் உள்ள தர்மபுரி ம

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்தார்.

கரும்பு அரவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா திம்மனஅள்ளியில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2016–2017–ம் ஆண்டிற்கான கரும்பு முதல் அரவைப்பருவ தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் விவேகானந்தன் கலந்து கொண்டு கரும்பு அரவை பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் துர்காமூர்த்தி, உதவி கலெக்டர் ராமமூர்த்தி, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் ரங்கநாதன், ஆலை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:–

தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு நடப்பாண்டில் 2 லட்சத்து 40 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தினமும் 2 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்படும். கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து உள்ளது. இதை பயன்படுத்தி 2016–2017–ம் ஆண்டின் அரவைப்பருவத்தில் 7,600 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடியை மேற்கொண்டு ஆலையின் முழு அரவைத்திறனான 2 லட்சத்து 40 ஆயிரம் டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு

விவசாயிகள் சம்பந்தப்பட்ட கரும்பு அலுவலர்களை அணுகி நடவிற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பமான நீடித்த, நிலையான சாகுபடி முறையில் பயிரிட ஏதுவாக விவசாயிகளுக்கு நிழல் வளைகூடங்கள், பருநாற்றுகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, பாலக்கோடு கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சாம்ராஜ், அதியமான் விவசாயிகள் சங்க தலைவர் மாதப்பன், நிர்வாகக்குழு உறுப்பினர் ராமகவுண்டர், தமிழக விவசாயிகள் சங்க கரும்பு பிரிவு செயலாளர் லோகநாதன், நிர்வாகி நஞ்சுண்டன், ஜெர்தலாவ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வீரமணி உள்பட விவசாயிகள், அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story