நெல்லையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் முடங்கின பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி


நெல்லையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் முடங்கின பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 17 Dec 2016 8:00 PM GMT (Updated: 2016-12-17T18:46:01+05:30)

நெல்லையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் முடங்கி கிடப்பதால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

நெல்லை,

நெல்லையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் முடங்கி கிடப்பதால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

நோட்டுகள் செல்லாது

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், பொதுமக்கள் தாங்கள் கைவசம் வைத்து இருக்கும் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தலாம் எனவும் மத்திய அரசு கடந்த மாதம் 8–ந் தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து பொது மக்கள் தினமும் வங்கிகளுக்கு சென்று தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினர்.

கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டன. பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நிரப்பி வைக்கப்பட்டன. 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததால் கடுமையான சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த மாதம் இறுதியில் 500 ரூபாய் நோட்டுகள் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டு, ஏ.டி.எம். மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டன. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டுகள் நெல்லைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

ஏ.டி.எம். மையங்கள் முடங்கின

நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.மையங்கள் நேற்றும் மூடப்பட்டு கிடந்தன. இதனால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள 2 ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில தனியார் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பி வைக்கப்பட்டன. அதிலும் சிறிது நேரத்தில் பணம் தீர்ந்து விட்டன. அதனால் வங்கிகளில் நேற்று கூட்டம் அலைமோதியது.

பொது மக்கள் நீண்ட வரிசையின் நின்று தங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை எடுத்து சென்றனர். கிராமப்புற வங்கிகளில் உள்ள ஏ.டி.எம்.மையங்கள் முற்றிலும் மூடப்பட்டு கிடக்கின்றன. கிராமப்புற மக்கள் பணம் எடுக்க நகரங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “எங்களுக்கு சென்னை ரிசர்வ் வங்கி முதல் கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அனுப்பியது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைத்தது. அந்த பணத்தை வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் நிரப்பி வைத்தோம். சமீபத்தில் 500 ரூபாய் புதிய நோட்டுகள் வரவில்லை. புழக்கத்தில் 500 ரூபாய் இல்லாததால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்தால் மட்டுமே பணத்தட்டுப்பாடு நீங்கும், அதுவரை இந்த நிலை தான் நீடிக்கும்“ என்றார்.

Next Story