சாலையில் பள்ளம் தோண்டியதால் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடலூர்முதுநகரில் பரபரப்பு


சாலையில் பள்ளம் தோண்டியதால் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடலூர்முதுநகரில் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-17T18:56:10+05:30)

கடலூர் முதுநகரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிக்காக குழாய் பதிக்கும் பணியின் போது சாலையில் பள்ளம் தோண்டியதால் அப்பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் கடலூர் நகர மக்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிக்காக குழாய் பதிக்கும் பணியின் போது சாலையில் பள்ளம் தோண்டியதால் அப்பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம்

கடலூர் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் கிணறுகள் அமைத்து அங்கிருந்து குழாய்கள் மூலம் கடலூர் நகராட்சி உள்ளிட்ட மேலும் பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் கடலூர் நகராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்காக சாலையோரங்களில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் அருகில் சாலையோரத்தில் பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் ஒரு இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதாக தெரிகிறது.

இதையறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையின் ஓரத்தில் தான் பள்ளம் தோண்ட வேண்டும், எக்காரணத்தை கொண்டும் சாலையில் பள்ளம் தோண்டக்கூடாது என்று கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர்.

பள்ளம் மூடப்பட்டது

இதையடுத்து தோண்டப்பட்ட பள்ளத்தை பொக்லின் எந்திரம் உதவியுடன் மணல் போட்டு நிரப்பப்பட்டது. பின்னர் அந்த பகுதியில் பணிகள் நடைபெறவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி பகுதி என்ஜினீயர் கூறும்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பணம் கட்டி அனுமதி வாங்கிக்கொண்டுதான் சாலையோரத்தில் பள்ளம் தோண்டி குழாய்களை அமைத்து வருகிறோம். நேற்று சிவானந்தபுரம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் ஒரு பக்கம் சாலை இன்னொரு பக்கம் வீடுகள், மின்மாற்றிகள் இருந்ததால் சாலையில் பள்ளம் தோண்ட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. இதையறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணியை தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.


Next Story