வாலிபரை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏர்வாடியில் பொதுமக்கள் சாலை மறியல்


வாலிபரை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏர்வாடியில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-17T21:06:08+05:30)

வாலிபரை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏர்வாடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏர்வாடி,

வாலிபரை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏர்வாடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாலிபர் மீது போலீசார் தாக்குதல்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி எல்.என்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் செந்தில்வேல் (வயது 30). இவர் நேற்று மாலையில் ஏர்வாடி பஜாரில் உள்ள ஒரு கடைக்கு வந்தார். அந்த கடையில் கடனுக்கு சிகரெட் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடைக்காரர் சிகரெட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கடையின் அருகே ஒரு அறையில் தங்கி இருந்த ஏர்வாடி போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கனகராஜ் என்பவர் கடைக்கு வந்து 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தார்.

இதன்பின்னர் மீண்டும் செந்தில்வேலுக்கும், கடைக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக ஏர்வாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் சமாதானம் செய்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து போலீசார் திடீரென்று செந்தில்வேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காலில் பலத்த காயம் அடைந்த அவர் கடையின் முன்பு வலியால் சுருண்டு விழுந்தார்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த எல்.என்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் மாலை 5.30 மணி அளவில் பஜாருக்கு வந்தனர். அவர்கள் கடையின் முன்பு கீழே விழுந்து கிடந்த செந்தில்வேலை தூக்கி வந்து ஏர்வாடி மெயின் ரோட்டில் படுக்க வைத்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். செந்தில்வேலை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, செந்தில்வேல் மீது தாக்குதல் நடத்திய போலீஸ்காரர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் ஏர்வாடி பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன.

Next Story