தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதியில் ரசாயன வாயு கசிவா? பொதுமக்கள் பீதி


தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதியில் ரசாயன வாயு கசிவா? பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 17 Dec 2016 7:30 PM GMT (Updated: 17 Dec 2016 3:54 PM GMT)

தூத்துக்குடி அருகே, குடியிருப்பு பகுதிகளில் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன வாயு கசிந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே, குடியிருப்பு பகுதிகளில் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன வாயு கசிந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

தொழிற்சாலைகள்

தூத்துக்குடி அருகே சில தனியார் தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. அவற்றை சுற்றிலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக ஸ்பிக்நகர், எம்.சவேரியர்புரம், அபிராமிநகர், கீதா நகர், முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் ரசாயன வாயு கலந்து வீசுவதாகவும், அதனால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நேற்று காலை முதல் இப்பகுதிகளில் அதிகளவில் ரசாயன கசிவு இருப்பதாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பீதியுடன் காணப்பட்டனர். இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்துக்கும் சிலர் தகவல் கொடுத்துள்ளனர்.

அமோனியம் வாயு கசிவா?


இதுகுறித்து அந்த பகுதி வியாபாரிகள் சிலர் கூறும் போது, ‘ஸ்பிக்நகர் பகுதியில் இருந்து முள்ளக்காடு வரை உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்றில் அமோனியம் எனப்படும் ரசாயன வாயு கலந்து வீசுகிறது. அதுவும் மாலை நேரத்தில் தான் அதிகளவில் வீசுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், குழந்தைகளுக்கு இருமல் உள்ளிட்ட நோய்கள் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி, இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது, என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

Next Story