ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மந்திரி மாணிக்கியாலாராவ் வலியுறுத்தல்


ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மந்திரி மாணிக்கியாலாராவ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:45 PM GMT (Updated: 17 Dec 2016 5:57 PM GMT)

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் அடுத்த 2017–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8–ந்தேதி நடைபெற உள்ளதால், புதிய ராஜகோபுரம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று மந்திரி மாணிக்கியாலாராவ் வலியுறுத்தினார். மந்திரி சாமி தரிசனம் ஆந்திர மாநில அறநிலைய

ஸ்ரீகாளஹஸ்தி,

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் அடுத்த 2017–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8–ந்தேதி நடைபெற உள்ளதால், புதிய ராஜகோபுரம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று மந்திரி மாணிக்கியாலாராவ் வலியுறுத்தினார்.

மந்திரி சாமி தரிசனம்

ஆந்திர மாநில அறநிலையத்துறை மந்திரி மாணிக்கியாலாராவ் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்தார். புதிய ராஜகோபுரம் கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சிவன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் குருவய்யநாயுடு, நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா ஆகியோர் லட்டு, தீர்த்தப்பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து மந்திரி மாணிக்கியாலாராவ், அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரி மற்றும் கோவில் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:–

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் அடுத்த 2017–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8–ந்தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி புதிய ராஜகோபுரம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அறங்காவலர் குழுவினரும், கோவில் அதிகாரிகளும் இணைந்து மகா கும்பாபிஷேக பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். கோபுர கலசம், தங்கக்கொடிமரம் ஆகியவற்றுக்கு தங்கத்தகடு பொருத்தும் பணி நடந்து வருகிறது.

கோவிலில் சுவைப் கருவி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளர்ச்சிக்காக வேண்டி, ஸ்ரீகாளஹஸ்தி நகரில் மாஸ்டர் பிளான் திட்டத்தை அமல்படுத்த ஆந்திர மாநில முதல்–மந்திரி சந்திராபாபுநாயுடு உத்தரவிட்டுள்ளார். மாஸ்டர் பிளான் திட்டத்தை அமல்படுத்தினால், பாதிப்புகள் ஏற்படுவோருக்கு ஆறுதல் கூறி, அவர்களை சமரசம் செய்ய வேண்டும். மாஸ்டர் பிளான் திட்டத்துக்குப் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கோவில் மகா கும்பாபிஷேகம் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேகத்தில் முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு பங்கேற்கிறார். மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருக்கும் மடாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். கோவிலில் சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதை சமாளிக்க, ‘‘சுவைப் கருவி’’ வைக்கப்பட உள்ளது. அதன் மூலம் தரிசன டிக்கெட், பிரசாதம், காணிக்கைகள் போன்றவற்றுக்குப் பணம் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story