தேனியில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 36 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது


தேனியில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 36 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2016 9:45 PM GMT (Updated: 17 Dec 2016 7:00 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி தேனியில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டிக்கு வெளி மாவட்டத்தில் இருந்து கஞ்ச

புஞ்சைபுளியம்பட்டி,

தேனியில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டிக்கு வெளி மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக சத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பழனியப்பன் புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்னேஷ்வரன் மற்றும் போலீசாருடன் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நால் சோதனை சாவடியில் நேற்று இரவு 10.30 மணி அளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினார்கள். காருக்குள் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் இருந்தனர். அவர்களை வெளியேற்றி காருக்குள் போலீசார் சோதனை செய்தனர். அப்போது உள்ளே 18 பண்டல்கள் இருந்தன. அவைகளை போலீசார் பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் காரில் வந்த 4 பேரையும் பிடித்து விசாரித்தார்கள்.

போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர்கள் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சொலவனூரை சேர்ந்த தனபால் என்பவருடைய மனைவி மருதா (வயது 50). மதுரை மாவட்ட ஆண்டிப்பட்டியை சேர்ந்த அன்பழகன் (44), மதுரையை சேர்ந்த அருண் (27), வேல்மருகன் (25) ஆகியோர் என்பதும், 4 பேரும் சேர்ந்து தேனியில் இருந்து 36 கிலோ கஞ்சாவை வாங்கி அவைகளை 2 கிலோ கொண்ட 18 பண்டல்களாக கட்டி ஈரோடு மாவட்டத்தில் விற்பனை செய்ய காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் கஞ்சா பண்டல்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட 4 பேரும் தேனியில் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கினார்கள். ஈரோடு மாவட்டத்தில் எங்கு விற்க முயன்றார்கள்? வெளிமாவட்டத்திலும் இவர்களுக்கு வியாபாரிகள் உள்ளனரா? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story