பருவமழை பொய்த்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் 23 அடியாக குறைந்தது 5 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் அபாயம்


பருவமழை பொய்த்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் 23 அடியாக குறைந்தது 5 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-18T00:43:51+05:30)

தேனி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் 23 அடியாக குறைந்துள்ளது. இதனால் 5 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வைகை அணை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையை

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் 23 அடியாக குறைந்துள்ளது. இதனால் 5 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையை நம்பி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மாதத்தில் முதல் போகத்திற்கும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2–ம் போகத்திற்கும் தண்ணீர் திறக்கப்படும்.

கடந்த 2015–ம் ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் ஓரளவு கைகொடுத்த நிலையில், அணையில் இருந்து இரண்டு போகத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இரண்டு பருவமழையும் ஏமாற்றியதால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் 5 மாவட்டங்களில் விவசாயம் அடியோடு முடங்கியுள்ளது.

குடிநீர் அபாயம்

தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் முடங்கியுள்ள நிலையில், வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் கவலை அளிப்பதாக உள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை மாநகரத்திற்கும், சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டப்பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இருக்கும் தண்ணீரின் மூலம் இன்னும் ஒருமாதத்திற்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். இதனால் மதுரை மாநகரத்தில் வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 23 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் 15 அடி முதல் 20 அடி வரையில் வண்டல் மண் அதிகம் படிந்துள்ளதால் வைகை அணையில் குறைந்த அளவு தண்ணீரே தேக்கப்பட்டுள்ளது. முக்கியமான நிலையில் வைகை அணைக்கு கைகொடுக்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் 112 அடியாக இருப்பதால் வருகிற கோடை காலங்களில் கடும் வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தண்ணீர் திறப்பு

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 23.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 164 மில்லியன் கனஅடியாக இருந்தது.


Next Story