குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா விருத்தாசலம் அருகே பரபரப்பு


குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா விருத்தாசலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 17 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-18T01:11:50+05:30)

கம்மாபுரம், விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு விருத்தாசலம் அடுத்த

கம்மாபுரம்,

விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இருப்புக்குறிச்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மினி குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, ஆழ்துளை மின்மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மோட்டார் பழுதானதாக தெரிகிறது. இதையடுத்து பழுதான மோட்டாரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் இருப்புக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாமல் அலுவலகம் பூட்டிக் கிடந்ததால், அவர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால், எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story