கூடலூரில் உழவர் சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் தகவல்


கூடலூரில் உழவர் சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-18T01:12:25+05:30)

கூடலூரில் உழவர் சந்தையை மீண்டும் திறக்க வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடைகள் இல்லாத சந்தை ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உழவர் சந்தைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் கூடலூர் பகுதியில் மட்டும் உழவர் சந்தை தி

கூடலூர்,

கூடலூரில் உழவர் சந்தையை மீண்டும் திறக்க வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடைகள் இல்லாத சந்தை

ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உழவர் சந்தைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் கூடலூர் பகுதியில் மட்டும் உழவர் சந்தை திறக்கப்பட வில்லை. இதனால் கூடலூர் பகுதியில் உழவர் சந்தை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2011–ம் ஆண்டு கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்று வந்தனர். மேலும் பொதுமக்களும் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

ஆனால் நாளடைவில் கூடலூர் நகர நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் பெருகியது. இதனால் உழவர் சந்தைக்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது. இதனால் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

முக்கியத்துவம்

இதனிடையே கடந்த 2014–ம் ஆண்டில் முதல் உழவர் சந்தையில் படிப்படியாக ஒவ்வொரு கடைகளாக மூடப்பட்டன. ஆனால் ஒரு கடை மட்டுமே தினமும் திறந்து இருந்தது. அதிலும் வியாபாரம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் உழவர் சந்தை மூடப்பட்டது. இதன் அருகே அம்மா உணவகம் உள்ளதால் தினமும் ஏராளமான மக்கள் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர். ஆனாலும் கடைகள் இல்லாததால் தொடர்ந்து மூடியே வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்த வேளாண் விற்பனைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக உள்ளூர் விவசாயிகளை வேளாண் விற்பனை வணிகத்துறை அதிகாரிகள் சந்தித்து பேசி வருகின்றனர். இதேபோல் உழவர் சந்தையில் விளைபொருட்களை வைத்து விற்பனை செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

விவசாயிகளுக்கு கட்டணம் இல்லாத கடைகள்

இது குறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிக அலுவலர் ரமேஷ் மற்றும் வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் கூறியதாவது:–

கூடலூரில் உழவர்சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கட்டணம் இல்லாத கடைகள், மின்னணு எடை தராசு வசதிகள் உழவர் சந்தையில் செய்து கொடுக்கப்பட உள்ளன. மேலும் பண்ணை காய்கறிகள், பழங்கள் விற்கப்பட உள்ளதால் நுகர்வோர் நேரடியாக வந்து தரமான விளைபொருட்களை வாங்க முடியும். அரசு நிர்ணயித்துள்ள நியாயமான விலையில் விளைபொருட்களை நுகர்வோர் வாங்கலாம். எனவே விவசாயிகள், நுகர்வோர் மீண்டும் உழவர் சந்தைக்கு வந்து பயனடையலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story