கோவை அகில இந்திய வானொலி நிலையம் அரசு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது பொன்விழாவில் கலெக்டர் பேச்சு


கோவை அகில இந்திய வானொலி நிலையம் அரசு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது பொன்விழாவில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 17 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-18T01:30:07+05:30)

அரசு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் கோவை அகில இந்திய வானொலி நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பொன்விழாவில் கலெக்டர் ஹரிகரன் பேசினார். பொன்விழா கோவையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம் கடந்த 18–12–1966–ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது

கோவை

அரசு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் கோவை அகில இந்திய வானொலி நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பொன்விழாவில் கலெக்டர் ஹரிகரன் பேசினார்.

பொன்விழா

கோவையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம் கடந்த 18–12–1966–ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்டு 50–வது ஆண்டு விழாவை தொடர்ந்து பொன்விழா கொண்டாட்டம் நேற்று கோவையில் நடந்தது. துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்ச்சி பிரிவு தலைவரும் உதவி இயக்குனருமான கே.சித்ரலேகா பேசினார்.

பொன்விழாவை முன்னிட்டு ரூ.10–க்கான சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. மேற்கு மண்டல அஞ்சல்துறை பொதுமேலாளர் சாரதா சம்பத் வெளியிட அதை பேரூர் இளைய ஆதினம் மருதாசல அடிகளார் பெற்றுக்கொண்டார்.

விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

2 விருதுகள்

கோவையில் கடந்த 18–12–1966–ம் ஆண்டில் முதன் முதலாக அகில இந்திய வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மாலை நேரங்களில் மட்டுமே ஒலிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் 1970–ம் ஆண்டு முதல் காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் ஒலிபரப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்மூலம் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் செய்திகள் ஒலிபரப்பப்பட்டது. 1971–ம் ஆண்டு முதல் நேரலை ஒலிபரப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் வேளாண்மை குறித்த செய்திகளும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதற்காக 2 விருதுகள் கோவை அகில இந்திய வானொலி நிலையம் பெற்றுள்ளது.

முக்கிய பங்கு

தற்போது கோவை அகில இந்திய வானொலி மூலம் 2 அலைவரிசைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 80 லட்சம் நேயர்கள் பயன்பெற்று வருகிறார்கள். தினமும் வேளாண் தொடர்பான செய்திகள், விழிப்புணர்வு செய்திகள், கல்வி, மருத்துவம், இயற்கை இடர்பாடுகள் குறித்த முன்னெறிவிப்பு செய்திகள் என பல்வேறு செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

நமது கோவை மாவட்ட செய்திகளையும், அரசின் நலத்திட்டங்களையும் பொதுமக்களுக்கு தெரிவிப் பதில் கோவை அகில இந்திய வானொலி நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் மாதம் ஒரு முறை ஒலிபரப்பாகும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் சிறப்பான ஒன்றாகும்.

இவ்வாறு கலெக்டர் ஹரிகரன் பேசினார்.

விழாவில் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, அகில இந்திய வானொலி கூடுதல் தலைமை இயக்குனர் தியாகராஜன், கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவச்சலம், ரூட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு நிறுவன தலைவர் கவிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி இயக்குனர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.


Next Story