பெரம்பலூரில், அதிகாரி திட்டியதால் தூக்க மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி கலெக்டரிடம் புகார்


பெரம்பலூரில், அதிகாரி திட்டியதால் தூக்க மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 17 Dec 2016 9:37 PM GMT (Updated: 2016-12-18T03:07:40+05:30)

பெரம்பலூரில், அதிகாரி திட்டியதால் தூக்க மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி கலெக்டரிடம் புகார்

பெரம்பலூர்,

பெரம்பலூரில் அதிகாரி திட்டியதால் பெண் டாக்டர் ஒருவர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த டாக்டர் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார்.

டாக்டர்

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்விவேக். இவர், வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாபுஸ்ரீ(வயது 30). டாக்டரான இவர், எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி உயர்அதிகாரி ஒருவர், எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில குறைகளை சுட்டி காட்டிய அந்த அதிகாரி, பாபுஸ்ரீயை நோயாளிகளின் முன்பு வைத்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை முயற்சி

இந்நிலையில் நேற்று முன்தினம், அவர் திடீரென தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட பாபுஸ்ரீயின் குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் நந்தகுமாரிடம், பாபுஸ்ரீ புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், எளம்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள 3 செவிலியர்களில் 2 பேர் விடுப்பில் உள்ளனர். அந்த பணிகளையும் சேர்த்து நானே கவனித்து வருகிறேன். இந்த நிலையில் ஆய்வுக்காக வந்த அதிகாரி நோயாளிகளின் முன்பு வைத்து திட்டியதால் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் தான் தற்கொலைக்கு முயன்றேன் என கூறியிருந்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பதில் கூறினார். உயரதிகாரி திட்டியதால் மருத்துவ அலுவலர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story