காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.1 லட்சம் கோடியில் நவீன பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் காவிரி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தல்


காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.1 லட்சம் கோடியில் நவீன பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் காவிரி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:30 PM GMT (Updated: 17 Dec 2016 10:07 PM GMT)

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 ஆண்டுகளில் நிறைவேற்றும் வகையில் ரூ.1 லட்சம் கோடியில் நவீன பாசன திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்று தஞ்சையில் நடந்த காவிரி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. கருத்தரங்கம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 ஆண்டுகளில் நிறைவேற்றும் வகையில் ரூ.1 லட்சம் கோடியில் நவீன பாசன திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்று தஞ்சையில் நடந்த காவிரி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

கருத்தரங்கம்

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு இணைந்து காவிரி பாசன விவசாய சங்கங்களின் ஆதரவோடு காவிரி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கை தஞ்சையில் நேற்று நடத்தியது. கருத்தரங்கிற்கு மூத்த பொறியாளர் சங்க மாநில செயலாளர் வீரப்பன் தலைமை தாங்கினார். மூத்த பொறியாளர் சங்க திருச்சி கிளை தலைவர் துரைராஜ் வரவேற்றார். பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப்பொறியாளர் மனுராஜ், தமிழர் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கருத்தரங்கில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், அறிவுரையாளர் பாரதிசெல்வன், மக்கள் கலை இலக்கிய பேரவை ராசாரகுநாதன், காவிரி டெல்டா உழவர்கள் பேரவை தலைவர் சேரன், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் மணிமொழியன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளர் தனபாலன், தஞ்சை மாவட்ட செயலாளர் சுவாமிமலை.சுந்தரவிமலநாதன், விவசாய சங்கங்களின் கூட்டியக்க அவைத்தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு தலைவர் காந்தி, மூத்த பொறியாளர் சங்க தஞ்சை கிளை தலைவர் பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

ரூ.25 லட்சம் நிவாரணம்

பின்னர் கருத்தரங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மூத்த பொறியாளர் சங்க மாநில செயலாளர் வீரப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது. கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய தண்ணீரை திறந்து விடாததால் பயிர்கள் கருகியதை கண்டு மனமுடைந்து உயிர்நீத்த விவசாயிகளுக்கு இரங்கலை தெரிவிப்பது. உயிரிழந்த விவாயிகளுக்கு ரூ.25 லட்சமும், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரு.25 ஆயிரமும், விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

பாசன திட்டங்கள்

காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் உடனடியாக காலதாமதம் இன்றி மத்திய அரசு அமைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக காவிரி டெல்டா பாசன பகுதிகளை மேம்படுத்திட எந்த பாசன திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தாதது வருத்தத்தை அளிக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைப்போல ரூ.1 லட்சம் கோடியில் 5 ஆண்டுகளில் நிறைவேற்றத்தக்க நவீன பாசன திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். அதற்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் தரவும், ஒத்துழைக்கவும் உறுதியாக இருப்போம்.

மத்திய அரசு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிராக கொண்டுவர இருக்கும் தண்ணீரை வணிகப்பொருளாக்கி தனியார் பன்னாட்டு நிறுவனத்தாருக்கு தாரைவார்க்கும் தேசிய நீர் கட்டமைப்பு மசோதாவை வன்மையாக எதிர்ப்பது. இந்த மசோதாவை தமிழக அரசு ஏற்று செயல்படுத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story