டெங்கு காய்ச்சல் அறிகுறியா? சிறுவன்– சிறுமி மருத்துவமனையில் அனுமதி நோய் தடுப்பு பணிகள் தீவிரம்


டெங்கு காய்ச்சல் அறிகுறியா? சிறுவன்– சிறுமி மருத்துவமனையில் அனுமதி நோய் தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 17 Dec 2016 10:12 PM GMT (Updated: 2016-12-18T03:42:24+05:30)

திருவோணம் பகுதியை சேர்ந்த சிறுவன்– சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்ற சந்தேகத்தின் பேரில் சுகாதாரத்துறையினர் திருவோணம் பகுதியில் தீவிர நோய்

திருவோணம் பகுதியை சேர்ந்த சிறுவன்– சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்ற சந்தேகத்தின் பேரில் சுகாதாரத்துறையினர் திருவோணம் பகுதியில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மர்ம காய்ச்சல்

தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் காவாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார். இவருடைய மகன் அருணாஸ் (வயது7). அதே கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகள் மங்கையர்கரசி (9). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களில் அருணாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றான். இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தஞ்சை அரசு ராசாமிராசுதாரர் மருத்துவமனையில் அருணாஸ் சிகிச்சை பெற்று வருகிறான். சிறுமி மங்கையர்கரசியும் மர்ம காய்ச்சல் காரணமாக அதே மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

டெங்கு காய்ச்சல் அறிகுறி

சிறுவன் அருணாசுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிறுமிக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியன் அறிவுறுத்தல் படி சுகாதாரத்துறை அலுவலர்கள் காவாளிப்பட்டி கிராமத்தில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காவாளிப்பட்டி அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்தல், அதே ஊரில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தல், கொசு ஒழிப்பு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை தஞ்சை மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்தசாரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் துரைராஜ் ஆகியோரை கொண்ட சுகாதாரத்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று முறையான சிகிச்சை பெறலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story