பிரச்சினைகளை சமாளிக்கும் வகையில் அடிப்படை சட்டங்களை மருத்துவர்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு


பிரச்சினைகளை சமாளிக்கும் வகையில் அடிப்படை சட்டங்களை மருத்துவர்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 17 Dec 2016 10:30 PM GMT (Updated: 17 Dec 2016 10:26 PM GMT)

பிரச்சினைகளை சமாளிக்கும் வகையில் அடிப்படை சட்டங்களை மருத்துவர்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார் . மருத்துவ கருத்தரங்கம் புதுவை கதிர்காமம் இந்திரா £ந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்

புதுச்சேரி,

பிரச்சினைகளை சமாளிக்கும் வகையில் அடிப்படை சட்டங்களை மருத்துவர்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மருத்துவ கருத்தரங்கம்

புதுவை கதிர்காமம் இந்திரா £ந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சட்டம் சார்ந்த மருத்துவ துறையின் சார்பில் நடைமுறை மருத்துவம் மற்றும் நடைமுறை சிக்கல்கள் என்ற தலைப்பில் மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்ட சிக்கல்கள்

மருத்துவர்களுக்கு எவ்வாறு சட்ட சிக்கல்கள் ஏற்படும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து தெரிந்து இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு கவனமாக எப்படி சிகிச்சையளிப்பது என்பதும் தெரிந்து இருக்க வேண்டும். தவறு நடந்துவிட்டால் போலீசார் கேட்கும் கேள்விகளுக்கும் நீதிமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் சூழல் ஏற்படும்.

புதுவையில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி என 2 ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளையை திறந்துள்ளோம். அங்கு தரமான மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரமான மருத்துவம்

புதுவை இந்திராகாந்தி மருத்துவமனையில் தினமும் சுமார் 3 ஆயிரம் புறநோயாளிகளும், அரசு பொது மருத்துவமனையில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் புறநோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் 7 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். பொதுமக்களுக்கு தரமான மருத்துவத்தை கொடுக்க முனைப்பாக உள்ளோம். கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் மாலை வேளையில் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் கல்விக்கு அடுத்தபடியாக சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவமனைகளால் புதுவை மக்களைவிட தமிழக மக்களே அதிக பயன் பெறுகிறார்கள். புதுவையில் தரமான மருத்துவம் கிடைக்கிறது என்பதாலேயே அவர்கள் இங்கு வருகின்றனர்.

அடிப்படை சட்டங்கள்

நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்கள் பிரச்சினையை சந்திக்க வேண்டி உள்ளது. மருத்துவர்கள் சரியான சிகிச்சையைதான் அளித்தோம் என்பார்கள். ஆனால் நோயாளிகளோ தவறான சிகிச்சை என்று குற்றம்சாட்டுவார்கள்.

தவறான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது. அதேபோல தவறான புகார்களை தெரிவிக்கும் நபர்களுக்கும் ஆதரவு அளிக்கக் கூடாது. நோயாளிகளின் நிலை குறித்து முழுமையாக மருத்துவர்கள் அறிக்கை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நோயாளி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது அறிக்கை தயார் செய்துகொண்டிருக்கக் கூடாது. உடனடியாக சிகிச்சை அளித்து அவரின் உயிரை காப்பாற்ற வேண்டும்.

நீதிமன்றத்தில் வக்கீல்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமானால் மருத்துவர்கள் அடிப்படை சட்டங்களை தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

நிதி பெறுவதில் சிரமம்

டெல்லிக்கு 5 முறை சென்று புதுவைக்கு கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். அந்த நிதியை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிதி பெறுவது பெரும் சிரமமாக உள்ளது. புதுவை மாநில வளர்ச்சிக்கு தான் நிதியை செலவு செய்ய உள்ளோம். மருத்துவம் மற்றும் உபகரணங்களுக்கு அதிக நிதியை செலவு செய்ய வேண்டும். அப்போது தான் தரமான மருத்துவம் கிடைக்கும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் பி.ஆர். பாபு, இயக்குநர் ராமன், மருத்துவக் கல்லூரி இயக்குநர் கோவிந்தராஜ், மற்றும் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story