பெங்களூருவில் இன்னும் 2 மாதத்தில் முதல் கட்ட புறநகர் ரெயில் திட்டம் அமல் மத்திய மந்திரி அனந்தகுமார் தகவல்


பெங்களூருவில் இன்னும் 2 மாதத்தில் முதல் கட்ட புறநகர் ரெயில் திட்டம் அமல் மத்திய மந்திரி அனந்தகுமார் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2016 11:07 PM GMT (Updated: 17 Dec 2016 11:07 PM GMT)

பெங்களூருவில் இன்னும் 2 மாதத்தில் முதல் கட்ட புறநகர் ரெயில் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் கூறினார். புறநகர் ரெயில் திட்டம் பெங்களூரு என்.ஆர்.காலனியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது

பெங்களூரு

பெங்களூருவில் இன்னும் 2 மாதத்தில் முதல் கட்ட புறநகர் ரெயில் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் கூறினார்.

புறநகர் ரெயில் திட்டம்

பெங்களூரு என்.ஆர்.காலனியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி அனந்தகுமார் கலந்து கொணடு புதிய பஸ் நிலையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–

மும்பையை போல் பெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டம் இன்னும் 2 மாதங்களில் செயல்படுத்தப்படும். அதன்படி முதல் கட்டமாக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்துக்கு ரெயில் இயக்கப்படும். அதன் பிறகு எலகங்கா, யஷ்வந்தபுரம், கெங்கேரி, பிடதி, ராமநகர், பங்காருப்பேட்டை ரெயில் வழித்தடத்தில் இரட்டை ரெயில்பாதை அமைத்து மின் இணைப்பு வசதி ஏற்படுத்தப்படும். இந்த பணிகள் முடிந்த பிறகு அந்த பாதையில் புறநகர் ரெயில் இயக்கப்படும்.

சமையல் எரிவாயு விநியோகம்

பெங்களூருவில் ஒரு பகுதியில் வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்கான பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதன் மூலம் 3,500 வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படும். விரைவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மத்திய அரசு உதவ தயாராக உள்ளது.

போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி மற்றும் அதிகாரிகள் டெல்லிக்கு வந்தால் அவர்களை மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி உள்பட மத்திய மந்திரிகளை சந்திக்க ஏற்பாடு செய்வேன். நிர்பயா நிதியில் ரூ.ஆயிரம் கோடி உள்ளது. பஸ் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக தனியாக அறைகள், கழிவறை வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ரூ.106 கோடி கர்நாடகத்திற்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்னணு பஸ்கள்

நாட்டிலேயே முதல் முறையாக மின்னணு பஸ்களை பெங்களூருவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மத்திய அரசின் ‘பேம்‘ திட்டத்தின் கீழ் 150 பஸ்கள் ஒதுக்கப்படும். மேலும் போக்குவரத்து பாதுகாப்புக்காக ரூ.40 கோடி நிதியை மத்திய அரசு வழங்கும். நர்ம் திட்டம், அம்ருத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திற்கு தேவையான 6 ஆயிரம் பஸ்களை ஒதுக்குவது குறித்து மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவுடன் விவாதிப்பேன்.

இவ்வாறு அனந்தகுமார் பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய மந்திரி ராமலிங்கரெட்டி, “அம்ருத் திட்டத்தின் கீழ் பஸ்களை வாங்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். ரூ.3.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த என்.ஆர்.காலனி பஸ் நிலையத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், பஸ் பாஸ் வழங்கும் மையம், கழிவறைகள், கடைகள், கோபுர கடிகாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன“ என்றார்.


Next Story