பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடக்கம்: அத்வானியின் கவலையை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்


பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடக்கம்: அத்வானியின் கவலையை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2016 11:39 PM GMT (Updated: 17 Dec 2016 11:39 PM GMT)

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கியதால், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி வேதனை தெரிவித்தார். இதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. பாராளுமன்றம் முடக்கம் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

மும்பை,

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கியதால், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி வேதனை தெரிவித்தார். இதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது.

பாராளுமன்றம் முடக்கம்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 16–ந்தேதி தொடங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் தடை விவகாரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் தங்களை பேச விடவில்லை என்று ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக குற்றம்சாட்டினர்.

இதன் காரணமாக பாராளுமன்ற அலுவல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வேதனை தெரிவித்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, பாராளுமன்ற பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்ய போவதாகவும், நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட மனம் உடைந்து இருப்பார் என்றும் சில எம்.பி.க்களிடம் கூறி வருத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

பீஷ்மர்

அத்வானியின் கவலையை தீவிரமாக கருதுமாறு மத்திய அரசை வலியுறுத்தி நேற்று சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் வெளியானது. அதில், கூறி இருப்பதாவது:–

இந்திய அரசியலின் பீஷ்மரான அத்வானி, பாராளுமன்ற ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அத்வானி காங்கிரஸ் தலைவர் அல்ல என்பதையும், காங்கிரசுக்கு எதிரான அரசியலில் அவர் முன்னோடியாக திகழ்ந்ததையும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.

கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி பாராளுமன்றத்துக்குள் நுழைந்தபோது, முழங்கால் இட்டு, பச்சை கம்பளத்தில் நெற்றியை வைத்து வணங்கி, கண்ணீர் சிந்தியதை இப்போது நினைவுகூருகிறோம்.

அரசு ஓடுகிறது

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் அரங்கேறிய ‘தர்பார்’களால் (காமெடி நிகழ்வுகள்), தன் ஆன்மாவை இழந்து, பாராளுமன்றம் கண்ணீர் வடிக்கிறது. பாராளுமன்றம் பொதுமக்களுக்கான தீவிர பிரச்சினைகளை விவாதிப்பதற்கான களம். எனினும், எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி, கூச்சல், குழப்பங்களை உருவாக்குகின்றனர்.

அதேசமயம், இந்த பிரச்சினைகளில் இருந்து அரசும் ஓடுகிறது. இது தான் இன்றைய காட்சி. 1,000, 2,000 ரூபாய்க்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இருந்தாலும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெரிய பணக்காரர்களின் வீடுகளில் இருந்து கத்தை, கத்தையாக கைப்பற்றப்படுகிறது.

சிறப்பு கூட்டம்

இதுபற்றி அரசு ஏதும் தெரிவிக்கவில்லை என்றாலோ, பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை என்றாலோ, பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி ரிசர்வ் வங்கி கவர்னருக்கு சம்மன் அனுப்புங்கள். இன்றைய நாட்களில் பிரதமர் மோடி சில சமயங்களில் உணர்ச்சிவசப்படுகிறார். அதேசமயம், அத்வானியின் கண்ணீரை கவனத்தில் எடுத்து கொண்டால் நல்லது.

இவ்வாறு சிவசேனா அதில் கூறியுள்ளது.


Next Story