கட்டிடக்கலையில் பழங்கால தமிழர்களின் திறமை


கட்டிடக்கலையில் பழங்கால தமிழர்களின் திறமை
x
தினத்தந்தி 18 Dec 2016 7:06 AM GMT (Updated: 2016-12-18T12:36:41+05:30)

ஆதிகாலத் தமிழர்கள் கட்டிடக் கலையில் தேர்ச்சி பெற்று, அழகான வீடுகளைக் கட்டி உன்னதமான நிலையில் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆணித்தரமான ஆதாரம் கீழடியில் கிடைத்து இருப்பதுதான் அங்கு நடைபெற்ற தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய வரலாற்றுப் பொக்கிஷமாகப் போற்றப்படுகிறது.

திகாலத் தமிழர்கள் கட்டிடக் கலையில் தேர்ச்சி பெற்று, அழகான வீடுகளைக் கட்டி உன்னதமான நிலையில் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆணித்தரமான ஆதாரம் கீழடியில் கிடைத்து இருப்பதுதான் அங்கு நடைபெற்ற தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய வரலாற்றுப் பொக்கிஷமாகப் போற்றப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அனைத்து தொல்பொருள் ஆய்வுகளிலும் சிக்காத, பழங்காலத் தமிழர் களின் வாழ்விடங்களுக்கான எச்சம், கீழடியில் மட்டுமே மிகப்பெரிய அளவில் கிடைத்து இருக்கிறது.

அங்கே தோண்டிய ஆய்வுக்குழிகளில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய பல கட்டிடங்களின் எச்சங்கள் உருக்குலையாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள், தங்கள் வாழ்விடங் களுக்காகவும், பல விதமான தொழில்கள் செய்வதற்காகவும் கட்டிய கட்டிடங் களில் பயன்படுத்திய செங்கல் அங்கே ஏராளமாகக் கிடைத்துள்ளன.

அந்தக் காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய செங்கல் வித்தியாசமாக, ஆனால் மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

மூவாயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னும் அந்த செங்கல்கள் இப்போதும் மிக உறுதியுடன் காட்சி அளிப்பது வினோதம்.

அங்கு கிடைத்த செங்கல்கள் ஒவ்வொன்றும் 33 செ.மீ. நீளமும், 21 செ.மீ. அகலமும், 5 செ.மீ. தடிமனும் கொண்டதாக உள்ளது.

அதாவது தற்போது நாம் பயன்படுத்தும் செங்கல்லை விட மூன்று மடங்கு எடை கொண்டதாக உள்ளது.

அதுபோன்ற செங்கல்லால் ஆன பல கட்டிடங்களின் சுவடுகள்தான் இப்போது கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த ஆய்வின்போது கிடைத்த ஒரு செங்கல்லின் மேல் பகுதியில், ஒரு நாயின் பாதச்சுவடு அழகாகப் பதிவாகி இருக்கிறது.

அந்த செங்கல்லைச் செய்து வெயிலில் உலர வைத்தபோது அந்தப் பகுதியில் ஓடிய ஒரு நாயின் பாதச்சுவடு அது என்பது, ஆய்வின்போது கிடைத்த ருசிகரமான தகவல் ஆகும்.

“கீழடியில் தோண்டி எடுக்கப்பட்ட அந்தப்பழங்கால கட்டிடங்களுக்கு நடுவே நின்று கொண்டு, சற்று கண்களை மூடி, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கி நமது எண்ணங்களைப் பறக்கவிட்டு, அப்போது அந்த இடத்தில் நடமாடிய தமிழர்களின் வாழ்க்கையை கற்பனை செய்து பார்த்தால் உடல் மெய்சிலிர்க்கிறது” என்று அங்கு போய் வந்த பார்வையாளர் ஒருவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.

அந்த அளவுக்கு அங்கு வாழ்ந்த தமிழர்கள் அருமையான கட்டிடங் களை நேர்த்தியாகக்கட்டி வாழ்ந்துஇருக்கிறார்கள்.

அங்கு காணப்படும் பல கட்டிடங் களில் சிறிய, அறைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

எனவே அவை பெரும்பாலும் வாழ்விடமாக அல்லாமல், ஏதோ ஒரு தொழில் செய்யும் இடமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்த கட்டிடங்களை கட்டுவதற்கு, ஒரே அளவிலான செங்கல்களை அடுக்கடுக்காக வைத்து அவற்றின் இணைப்பு பூச்சுக்கு மிக உறுதியான களிமண் சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்து இருக்கிறது.

வீட்டுச் சுவர்கள் இரட்டை அடுக்கு முறையில் கட்டப்பட்டுள்ளன.

வடக்கு தெற்காக மிக நீண்ட செங்கல் சுவர் ஒன்றும் அங்கே காணப்படுகிறது. அதன் இறுதிப்பகுதி இன்னும் தோண்டிப் பார்க்கப்படாததால், அந்த சுவர் எதற்காகக் கட்டப்பட்டது என்பதும், அதன் முழு வடிவம் என்ன என்பதும் தெரியவில்லை.

கட்டிடங்களைக் கட்டியதோடு மட்டும் அல்லாமல், அந்தக் கட்டிடங்களின் தரையில் வழுவழுப்பான செங்கல்லைக் கொண்டு தளம் அமைத்து இருக்கிறார்கள் என்பது, அந்தக்கால தமிழர்களின் நாகரிக வாழ்வுக்கு மேலும் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

அந்த தளங்கள் ஒரு சில இடத்தில் சேதம் அடைந்து இருந்தாலும் அவை இப்போதும் பளிச்சிடுகின்றன.

அங்கே காணப்பட்ட கட்டிடங்களுக்கு இடையே ஆங்காங்கே மண்பானையால் ஆன தொட்டிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு அறைகளுக்கும் ஊடே குறுக்கும் நெடுக்குமாக செல்லும் திறந்தவெளி கால்வாய்கள் மிக அழகாகக் கட்டப்பட்டுள்ளன.

ஒரு சில இடங்களில் மூடப்பட்ட கால்வாய்களும் இருக்கின்றன.

அங்கே உள்ள கட்டிடங்களுக்கு செங்கல்லால் மேற்கூரை அமைத்து இருந்ததும், அந்த மேற்கூரைக்கான செங்கல்கள் துவாரம் போடப்பட்டு, அதன் வழியாக ஆணிகளால் இணைக்கப்பட்டு இருந்தன என்பதும் தெரியவந்து இருக்கிறது.

காலம் ஏற்படுத்திய சேதத்தால் அந்த கூரை சரிந்து கீழே விழுந்து இருப்பதையும் பார்க்க முடிகிறது.

ஓர் அறையின் மூலையில் ஒரே அளவுள்ள 5 பானைகள் ஏதோ ஒரு கோணத்தில் அருகருகே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஏதேனும் சமய சடங்குக்காக அவை இவ்வாறு வைக்கப்பட்டு இருந்தனவா? அல்லது அங்கு ஏதாவது ரசாயன தொழில் செய்வதற்காக அவை வைக்கப்பட்டு இருந்தனவா என்பது ஆய்வுக்குரியதாகும்.

நூல் நூற்பதற்கு பயன்படும் ‘தக்ளி’ ஒன்றும் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் ஒன்று ஆகும். இந்த நிலையில் அங்கே காணப்பட்ட சிறிய அளவிலான அறைகளைப் பார்க்கும்போது அந்த இடம், துணிகளுக்கு சாயமேற்றும் தொழிற்சாலையாக இருந்து இருக்கலாம் என்றும், அங்குள்ள சில கட்டிடங்கள் நெசவுக்கூடமாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

தொல்பொருள் ஆய்வு மேற்கொண்ட ஒரு குழியில் காணப்பட்ட, சின்னஞ்சிறிய அறைகள் - அந்த அறைகளுக்கு தண்ணீரை அதிக அளவில் கொண்டு வருவதற்கும், அங்கு இருந்து கழிவு நீரை வெளியேற்றுவதற்கும் அமைத்த கால்வாய்கள் - அதிலும் சில கால்வாய்கள் மிக கவனமுடன் மூடப்பட்ட நிலையில் இருந்தது - அங்குள்ள கழிவு நீர் தொட்டிகள் - இவற்றுக்கு இடைப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு இருந்த அதிக வெப்பத்தைக் கொடுக்கும் வகையிலான ஊது உலைகள் - இவை எல்லாமே ஏதோ மிக முக்கியமான தொழில் அங்கே நடைபெற்று இருக்கக்கூடும் என்பதைக் காட்டுவதாகவும், அங்கு கிடைத்த மண் மாதிரியை எடுத்து ரசாயன பரிசோதனை செய்தால் மட்டுமே எந்த வகையான தொழில் அங்கு நடைபெற்றது என்பதைக் கண்டறிய முடியும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மொத்தத்தில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட இடம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மாபெரும் தொழில் நகராக இருந்து இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

கீழடியில் கிடைத்த மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்கள், அங்கு வாழ்ந்த தமிழர்களின் ஆண்டுக்கணக்கை சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு தோண்டிய குழிகளில் மிக அதிக ஆழத்தில், அதாவது தோண்டப்பட்ட குழிகளின் கீழ் அடுக்குகளில் கிடைத்த மண்பாண்டங்களில் குறியீடுகள் மட்டும் உள்ளன.

அதற்கும் சற்று மேலே உள்ள அடுக்கில் இருந்து கிடைத்த மண்பாண்டங்களில் எழுத்துக்களுடன், சில குறியீடுகளும் சேர்த்து காணப்படுகின்றன.

அதற்கும் மேலாக உள்ள மூன்றாவது அடுக்கில் கிடைக்கும் மண்பாண்டங்களில் எழுத்துக்கள் மட்டுமே இருக்கின்றன.

இவை எல்லாம், கீழடி பகுதி, பல நூற்றாண்டுகளாகவே பழங்காலத் தமிழர்கள் தொடர்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்த இடமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகள், மற்றும் அங்கே கிடைத்த பொருட்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அந்த இடம், கல்வியில் சிறந்த - வசதி மிக்கவர்கள் வாழ்ந்த பூமியாகத் தோன்றுகிறது.

கீழடியில் அதிகாரிகள் ஆய்வுக்கு என்று தேர்ந்தெடுத்த இடம் ஏறத்தாழ 100 ஏக்கர் ஆகும். ஆனால் அங்கு மிகக்குறுகிய இடத்தில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.

முழு அளவிலான ஆய்வுகள் செய்த பிறகே அந்த இடம் பற்றிய மேலும் பல அதிசய தகவல்கள் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு இருந்த கட்டிடங்களின் எச்சம் மட்டுமே இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் பற்றி அறிய வேண்டுமானால், அவர்கள் பயன்படுத்திய மயான பூமியைத் தோண்டிப் பார்க்க வேண்டும்.

கீழடி மக்கள் பயன்படுத்திய மயான பூமி, எங்கே இருந்தது என்பதையும் பழங்காலத் தமிழர்கள், மயான பூமியை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதையும் அடுத்த வாரம் பார்க்கலாம்.

உறை கிணறுகள்

கீழடியில் கிடைத்த மேலும் ஒரு மாபெரும் பொக்கிஷம், அங்கே உள்ள உறை கிணறுகள் ஆகும்.

சங்க கால இலக்கியமான பட்டினப்பாலையில் உறை கிணறு பற்றிய குறிப்பு, ‘உறைகிணற்று புறச்சேரி’ என்ற வாசகம் மூலம் காணப்படுகிறது.

அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதைப் போன்ற உறை கிணறுகள் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழர்கள், வைகை ஆற்றுக்கு அருகே வசித்த போதிலும் தங்கள் குடிநீர் தேவைக்கு உறை கிணறுகளை அமைத்து இருந்தது இதன் மூலம் தெரிய வருகிறது.

அந்த உறை கிணறுகளுக்கான உறைகள், சுமார் ஒன்றரை அடி உயரத்தில் மண்ணால் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளன.

தோண்டப்பட்ட குழிகளில், மேல் அடுக்கில் உள்ள கிணற்றின் உறைகள் 47 செ.மீ., கீழ் மட்டத்தில் உள்ள கிணற்றின் உறைகள் 32 செ.மீ. சுற்றளவு கொண்டவையாக உள்ளன.

ஒவ்வொரு உறையின் மேல் பகுதி சற்றுப் பெருத்தும் அடிப்பகுதி சற்று சிறுத்தும், ஏறக் குறைய கூம்பு வடிவில் உள்ளன. இவற்றை ஒன்றின் மீது ஒன்றாகக் கவிழ்க்கும்போது அவை உறுதியான உறை கிணறாக உருவாகிவிடுகிறது.

அந்த உறைகளில் ஆங்காங்கே துவாரம் அமைத்து இருக்கிறார்கள், பூமிக்குள் ஓடும் சுத்தமான ஊற்று நீரை கிணற்றில் கொண்டுவந்து சேர்ப்பதற்காக அவர்கள் இந்த துவாரங்களை அமைத்து இருக்கிறார்கள்.

Next Story