பிரதமருக்காக தயாராகும் சமையல்


பிரதமருக்காக தயாராகும் சமையல்
x
தினத்தந்தி 18 Dec 2016 7:15 AM GMT (Updated: 2016-12-18T12:45:41+05:30)

ரன்வீர் பிரார்! சுவை மிகுந்த சமையல் பதார்த்தங்களை விதவிதமாக தயாரிக்கும் சமையல் கலை நிபுணர். வித்தியாசமாக பல சமையல் முறைகளை கையாண்டு தொலைக்காட்சி ரசிகர்களை தன்பக்கம் ஈர்ப்பவர்.

ன்வீர் பிரார்! சுவை மிகுந்த சமையல் பதார்த்தங்களை விதவிதமாக தயாரிக்கும் சமையல் கலை நிபுணர். வித்தியாசமாக பல சமையல் முறைகளை கையாண்டு தொலைக்காட்சி ரசிகர்களை தன்பக்கம் ஈர்ப்பவர். இந்தியா முழுக்க ஏராளமான பெண்கள் இவரது சமையல் முறைகளை பின்பற்றி ருசியாக சாப்பிட்டு வருகிறார்கள். லக்னோவை சேர்ந்த இவர் சமையல் பற்றிய சுவாரசியமான தகவல்களை நமக்கு சுவைக்க தருகிறார். பிரதமர் மோடிக்காக உணவுகள் தயார் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். அவரிடம் பேசுவோம்:

சமையல் பற்றி உங்களது பொதுவான கருத்து என்ன?


“சமையல் ஒரு சுவாரசியமான கலை. அதை யாரும் மேம்போக்காக கற்றுக்கொண்டு விட்டுவிடக்கூடாது. விதவிதமாக சாப்பிட நினைக்கிறோம். அதேபோல விதவிதமாக சமைப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். சமையல் ஒரு தண்டனை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய 16 வயதில் சமையலை பேஷனாகவும், தொழிலாகவும் மாற்றிவிட்டேன்”

முதன் முதலில் எப்போது சமைக்க ஆரம்பித்தீர்கள்?


“அது ஒரு சுவாரசியம் நிறைந்த கதை. தேவைதான் ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருகிறது. சிறுவயதில் என்னுடன் படித்த சக மாணவர்களை என் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தேன். அவர்களுக்கு விருந்து படைப்பதற்காக சமையல் ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது என் அம்மாவிற்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. திகைத்து போய் விட்டேன். வீட்டிற்கு அழைத்திருக்கும் நண்பர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் திருப்பி அனுப்ப மனமில்லை. நானே சமைக்க முடிவு செய்தேன். என் அம்மாவிடம் டிப்ஸ் கேட்டு நானே ஒரு சில உணவு வகைகளை தயாரித்தேன். அதனை நண்பர் களுக்கு பரிமாறினேன். ஒரு வழியாக விருந்து முடிந்தது. சமையல் அருமையாக இருந்ததாக நண்பர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் அவர்கள் என் அம்மா சமையல் செய்ததாகவே நினைத்தார்கள். அவர்களிடம் நான்தான் சமைத்தேன் என்று கூறினேன். அவர்கள் நம்பவேயில்லை. அதனையே என் சமையலுக்கு கிடைத்த வெற்றியாக கருதினேன். அன்று முதல் விதவிதமாக சமைக்க ஆரம்பித்துவிட்டேன்”

சமைப்பதை கஷ்டம் என்று சிலர் சொல்கிறார்களே?

“சமையல் செய்வதற்கு ஆர்வம் காட்டுபவர்களுக்கு அது சுவாரசியம். விருப்பம் இல்லாத வர்களுக்கும், சமையல் தெரியாதவர்களுக்கும் கஷ்டம்”

சமையல் அறை எப்படி இருக்க வேண்டும்?

“சமையலறை ஒரு புனிதமான இடம். எல்லோருடைய பசியையும் தீர்க்குமிடம். மனிதனுக்கு சிந்தனை ஆற்றல் உருவாகுமிடம் சமையல் அறைதான். அவை எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். மகிழ்ச்சியான மனநிலையில் சமையல் வேலைகளை செய்ய வேண்டும். சமையல் ஒரு வேலை அல்ல. அது ஒரு கலை. அதனை மேலும், மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்”

உங்களிடம் யாராவது சமையல் தொடர்பாக சந்தேகம் எழுப்பும்போது அது உங்களுக்கு தெரியாததாக இருந்தால்...?

“பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் தெரியும். தெரியாத கேள்விகளுக்கு சிறிது அவகாசம் பெற்று தெளிவுபடுத்துவேன். எல்லா விஷயமும், எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாதே!”

பல நாட்டு உணவு வகைகளை சமைக்க கற்றுக்கொள்வதால் என்ன லாபம்?

“பலவகையான உணவு மூலப்பொருட்களின் தன்மையையும், அவைகளின் சுவைகளையும் அறிந்து கொள்ளலாம். சமைப்பதற்கு தேவையான ஏதேனும் ஒரு பொருள் இல்லாவிட்டாலும் அதற்கு பதிலாக அதே சுவையுடன் கூடிய மாற்றுப் பொருட்களை பயன் படுத்தி வித்தியாசமான சுவையை பெறலாம்”

உங்கள் மனைவி பல்லவி என்ன வகையான உணவு வகைகளை சமைப்பார்?

“என் மனைவி மகாராஷ்டிராவை சேர்ந்தவர். அந்த மாநில உணவுகளை சிறப்பாக சமைப்பார். குறிப்பாக ‘மால்வானி சிக்கன்’ அவருடைய சிறப்பு தயாரிப்பு”

வெளிநாட்டு உணவுகளை சமைக்கும் அனுபவம்?

இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ், ஜப்பான் நாட்டு உணவு வகைகள் பல நிகழ்ச்சிகளில் சமைத்து காட்டப்படுகிறது. நான் இலங்கை, கொரியா, பெரு, பிரேசில், டென்மார்க் போன்ற நாடுகளின் உணவு வகைகளை சமைத்து காட்டு கிறேன். நம் நாட்டில் கிடைக்காத மூலப்பொருட்களுக்கு பதிலாக வேறு எந்த பொருட்களை பயன் படுத்தலாம் என்பதையும் விளக்குகிறேன். ஒரு பொருளின் மணம், குணம் ஒரே மாதிரி இருந்தால் அதேபோல சுவை கொண்ட வேறு பொருளை பயன்படுத்தி அந்த உணவு வகையை தயாரிக்க கற்றுக் கொடுக்கிறேன். அதற்கு மற்ற நாட்டு உணவுப் பொருட்களின் தன்மை அறிந்து செயல்பட வேண்டும்”

நம் நாட்டில் வெளிநாட்டு உணவு வகைக்கு வரவேற்பு இருக்கிறதா?

“ஐந்து நட்சத்திர ஓட்டல் களில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில் இருந்த உணவு வகைகளை நம் வீட்டிலும் தயாரித்து சாப்பிட முடியும் என்கிறபோது வரவேற்பு நிச்சயம் கிடைக்கும். உதாரணமாக துருக்கியில் தயாரிக்கப்படும் புகழ்பெற்ற பாயச வகையை நம் நாட்டு ரொட்டியிலே தயாரித்துவிடலாம். தொலைக்காட்சியில் எதையோ ஒன்றை சமைத்து காட்டிவிட்டு இதை சாப்பிட நீங்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்றால் யாருமே அந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டார்கள். நான் சமைத்து காட்டும் எல்லா நாட்டு உணவு வகைகளையும் எல்லோரும் வீட்டில் செய்து சாப்பிடலாம். இதுதான் எனக்கு கிடைக்கும் வெற்றி”

உங்களுக்கு பிடித்தமான வெளிநாட்டு உணவு எது?

“இத்தாலியன், ஜப்பானிய உணவு வகைகள் எனக்கு பிடித்தமானவை. புதிதாக கற்றுக்கொண்ட கொரியன் உணவு வகையான டோபு டிக்கர் உணவையும் சூப்பராக சமைப்பேன்”

இந்திய நாட்டு உணவு வகையில் பிடித்தது?


“நான் முதன் முதலில் கற்றுக்கொண்டது லக்னோ பிரி யாணிதான். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். கொல்கத்தாவில் இலீஷ் பாபா, தென்னிந்திய மீன் வறுவல், வட நாட்டு கிச்சடி வகைகளும் எனக்கு பிடிக்கும்”

சிறுவயதில் உங்கள் சமையல் திறமையை வீட்டில் உள்ளவர்கள் ஊக்குவித்தார்களா?

“ஆமாம். ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லா பிள்ளைகளும் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் என் தாத்தாவுடன் குருத்துவார் சென்று அங்குள்ள அன்னதான கூடத்தில் நடக்கும் சமையலுக்கு உதவி செய்வேன். அங்கு புதிய உணவு வகைகளையும் சமைக்க கற்றுக்கொண்டேன். என் சமையல் ஆர்வத்தை எல்லோரும் ஊக்குவித்தார்கள்”

மற்றவர்கள் சமைப்பதை டி.வி.யில் பார்ப்பீர்களா? டி.வி.யில் நிகழ்ச்சி நடத்துவது எளிதானதா?

“மற்றவர்களின் நிகழ்ச்சிகளையும் பார்ப்பேன். எனக்கு தெரியாததை கற்றுக்கொள்வேன். பார்வையாளர்கள் டி.வி.யில் சமைக்கப்பட்ட உணவைதான் பார்க்கிறார்கள். ஆனால் நேரடி காட்சி என்பது சில நேரங்களில் கஷ்டமானது. நாம் எதிர்பார்ப்பது போல பக்குவமாக வராது. வாழ்க்கையில் சாதிப்பது கஷ்டமானது. எந்த விஷயமானாலும் போராடித்தான் ஜெயிக்க வேண்டும்”

உங்களுடைய நீண்ட நாள் ஆசை..?

“பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒருநாள் என் கையால் சமைத்து விருந்து பரிமாற வேண்டும் என்ற ஆசை இருக் கிறது. அதற்காக ஸ்பெஷல் குஜராத்தி உணவு வகைகளை செய்து பார்த்து வருகிறேன். அவருக்கு பிடித்த உணவு வகைகளை கற்றுக்கொண்டு பிறகு அவருக்கு அழைப்பு விடுப்பேன். பிரதமருக்கும் எனது ஆசையை தெரியப்படுத்தி இருக்கிறேன். நிச்சயம் என் ஆசை நிறைவேறும்” என்கிறார்.

Next Story