விருதுநகர் அருகே வேன் டிரைவர் வெட்டிக் கொலை கணவன்–மனைவி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


விருதுநகர் அருகே வேன் டிரைவர் வெட்டிக் கொலை கணவன்–மனைவி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-18T22:17:21+05:30)

விருதுநகர் அருகே வீட்டுச்சாமான்களுடன் வயது முதிர்ந்த தம்பதியரை ஏற்றி வந்த வேன் டிரைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தம்பதி விருதுநகர் அருகே உள்ள எம்.அழகாபுரியைச் சேர்ந்தவர் அழகர்சாமி(வயது 80). இவரது மனைவி தேவியம்மாள்(68). இவர்கள

 

விருதுநகர்

விருதுநகர் அருகே வீட்டுச்சாமான்களுடன் வயது முதிர்ந்த தம்பதியரை ஏற்றி வந்த வேன் டிரைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தம்பதி

விருதுநகர் அருகே உள்ள எம்.அழகாபுரியைச் சேர்ந்தவர் அழகர்சாமி(வயது 80). இவரது மனைவி தேவியம்மாள்(68). இவர்களது மகன் கண்ணன். தந்தை மகனுக்கு இடையில் நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அழகர்சாமி தனது மனைவி தேவியம்மாளுடன் விருதுநகர் அருகே உள்ள பெரியவள்ளிக்குளத்தில் தங்களது மகள் லதாவுடன் வசித்து வருகின்றார். அழகர்சாமி தனது மனைவி மற்றும் மகள் லதா குடும்பத்தினருடன் எம்.அழகாபுரியில் அவர்களது தோட்டத்தில் உள்ள வீட்டில் குடியேற திட்டமிட்டு நேற்று மாலை வீட்டுச் சாமான்களை ஏற்றிக் கொண்டு அங்கு வந்தனர். இந்த வேனை அதன் உரிமையாளர் பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்த பாலாஜி(37) என்பவர் ஓட்டி வந்தார்.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் அழகர்சாமி தோட்டத்தில் குடியிருக்க வந்ததை அறிந்த கண்ணன், அவரது மனைவி செந்தாமரை, மைத்துனர் சுப்புராஜ் ஆகிய மூவரும் தோட்டத்திற்கு வந்தனர். அப்போது அழகர்சாமி வேன் டிரைவர் பாலாஜி உதவியுடன் வேனில் வந்த சாமான்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். அவரது மகள் லதா வீட்டை துப்புரவு செய்து கொண்டிருந்தார். கண்ணன், அழகர்சாமியிடம் தோட்டத்தில் குடியிருக்க கூடாது என தகராறு செய்தார். தகராறு முற்றியதில் கண்ணன் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஆத்திரத்துடன் அழகர்சாமியின் மகள் லதாவை வெட்டினர். அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்த வேன் டிரைவர் பாலாஜியையும் தலையில் அரிவாளால் வெட்டிச் சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் வேன் டிரைவர் பாலாஜி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வலைவீச்சு

இது பற்றி தகவலறிந்த லதாவின் கணவர் ராமானுஜம் சூலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டுப்பட்ட லதாவை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட வேன் டிரைவர் பாலாஜியின் உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது பற்றி வழக்குப்பதிவு செய்த சூலக்கரை போலீசார் கண்ணன், அவரது மனைவி செந்தாமரை, மைத்துனர் சுப்புராஜ் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர். முதியவர் அழகர்சாமிக்கு பல லட்சம் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அவரது மகன் கண்ணன் அனைத்து சொத்துக்களையும் அபகரித்து கொண்டு தன்னையும், தன் மனைவியையும் விரட்டி விட்டுவிட்டதாக பல முறை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


Next Story