நாமக்கல் அருகே திருமணம் செய்ய மறுத்ததால் பயங்கரம்: பிளஸ்–1 மாணவி அடித்துக்கொலை; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தந்தையிடம் போலீஸ் விசாரணை


நாமக்கல் அருகே திருமணம் செய்ய மறுத்ததால் பயங்கரம்: பிளஸ்–1 மாணவி அடித்துக்கொலை; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு தந்தையிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 18 Dec 2016 11:00 PM GMT (Updated: 18 Dec 2016 5:40 PM GMT)

நாமக்கல் அருகே திருமணம் செய்ய மறுத்த பிளஸ்–1 மாணவி அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாணவியின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்–1 மாணவி நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்

எருமப்பட்டி,

நாமக்கல் அருகே திருமணம் செய்ய மறுத்த பிளஸ்–1 மாணவி அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாணவியின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்–1 மாணவி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வாழவந்தி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 47). இவரது மனைவி ராசம்மாள் முன்னாள் பஞ்சாயத்து தலைவியாக இருந்தார். இவர்களது மகன் சுபாஷ்சந்துரு தொட்டியம் அருகே உள்ள தனியார் என்ஜீனீயரிங் கல்லூரியில் 2–வது ஆண்டு படித்து வருகிறார்.

இவர்களது மூத்த மகள் ஐஸ்வர்யா திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்–1 படித்து வந்தார். இளையமகள் அபிநயா நாமக்கல்லில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

அடித்துக்கொலை

ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர், மாப்பிள்ளை பார்த்தனர். இதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஐஸ்வர்யாவை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திருமணத்திற்கு ஜஸ்வர்யாவை அவரது பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், ஐஸ்வர்யா திருமணத்துக்கு சம்மதிக்காமல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அப்போது ஆத்திரம் அடைந்த தங்கராஜ் மகள் ஐஸ்வர்யாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஐஸ்வர்யா மயக்கம் போட்டு விழுந்தார். உடனே அவரை தனியார் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சிகிச்சைக்காக நாமக்கல்லுக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியில் புதுப்பட்டி என்ற ஊர் அருகே வரும்போது ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து அவரது உடலை பெற்றோர் மீண்டும் வாழவந்தியில் உள்ள வீட்டுக்கு திரும்ப கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீசுக்கு தெரியாமல் ஐஸ்வரியாவின் உடலை சுடுகாட்டில் எரித்து விட்டனர்.

தந்தையிடம் விசாரணை

இந்த பயங்கர கொலை குறித்து எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்–இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் வாழவந்திக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் தந்தை தங்கராஜை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story