டி.என்.பாளையம் அருகே 2 கன்றுக்குட்டிகளை கடித்து கொன்ற சிறுத்தைப்புலியா? பொதுமக்கள் பீதி


டி.என்.பாளையம் அருகே 2 கன்றுக்குட்டிகளை கடித்து கொன்ற சிறுத்தைப்புலியா? பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 18 Dec 2016 10:00 PM GMT (Updated: 18 Dec 2016 6:37 PM GMT)

டி.என்.பாளையம் அருகே 2 கன்றுக்குட்டிகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கடித்து குதறப்பட்ட... டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகன்னாதன் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் டி.என்.பாளையம் வன

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே 2 கன்றுக்குட்டிகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

கடித்து குதறப்பட்ட...

டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகன்னாதன் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் டி.என்.பாளையம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இவர் தன்னுடைய தோட்டத்தில் 2 பசு மாடுகள் மற்றும் 3 கன்றுக்குட்டிகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாடு மற்றும் கன்றுக்குட்டிகளை தோட்டத்தில் கட்டிவிட்டு அருகில் உள்ள தன் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை மாட்டில் பால் கறப்பதற்காக தன்னுடைய தோட்டத்துக்கு ஜெகன்னாதன் வந்து உள்ளார். அப்போது அங்கு தோட்டத்தில் 2 கன்றுக்குட்டிகள் கழுத்து மற்றும் உடல் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஜெகன்னாதன் தோட்டத்துக்கு வந்தனர்.

சிறுத்தைப்புலி

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிலர் அந்த தோட்டத்தில் பதிவான கால் தடங்களை பார்வையிட்டனர். அப்போது அது சிறுத்தைப்புலியின் கால் தடம் என தெரியவந்தது.

உடனே இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் டி.என்.பாளையம் வனச்சரகர் சுரேந்திரநாத் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தோட்டத்தில் பதிவாகி இருந்த கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தைப்புலியின் கால் தடம் இல்லை என்றும், நாயின் கால் தடம் என்று கூறினர். எனவே இதுகுறித்து பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பொதுமக்கள் இது சிறுத்தைப்புலியின் கால் தடம் என்று கூறினர்.

பொதுமக்கள் பீதி

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அருகில் ஒரு தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டை சிறுத்தைப்புலி கடித்து கொன்று உள்ளது. மேலும் கொங்கர்பாளையம் அருகில் உள்ள முட்டியங்கிணறு பகுதியில் சித்தையன் என்பவர் வளர்த்த நாயையும் சிறுத்தைப்புலி கடித்து கொன்று உள்ளது.

இதனை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து உள்ளனர். 2 மாதத்துக்கு பின்னர் தற்போது மீண்டும் ஊருக்குள் சிறுத்தைப்புலி புகுந்து உள்ளது. எனவே வனத்துறையினர் கொங்கர்பாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்,’ என்று தெரிவித்தனர். கொங்கர்பாளையம் பகுதியில் மீண்டும் சிறுத்தைப்புலி புகுந்து உள்ளதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.


Next Story