திண்டுக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் ரூ.1 கோடி கடனுதவி


திண்டுக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் ரூ.1 கோடி கடனுதவி
x
தினத்தந்தி 18 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-19T00:28:37+05:30)

திண்டுக்கல் மாவட்டத்தில், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார். தொழில்முனைவோர் பயிற்சி திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ச

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

தொழில்முனைவோர் பயிற்சி

திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சாணார்பட்டி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:–

படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக்கும் நோக்குடன் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் தொழிற்கல்வி பயின்ற இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியவற்றின் மூலம் 25 சதவீத முதலீட்டு மானியம் மற்றும் 3 சதவீத பின்முனை வட்டி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.

அதன்படி அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த, பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில் தொடங்க 25 சதவீத அரசு மானியத்துடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில், திண்டுக்கல் மாவட்டத்தில் 55 நபர்களுக்கு ரூ.7 கோடியே 68 லட்சத்து 36 ஆயிரம் மானியத்தில் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

இதன்மூலம் ஆயத்த ஆடைகள், தென்னை நார்கயிறு, முருங்கைக்காய் பொடி, மர சாமான்கள், விசைத்தறி மூலம் துணிகள், ஆட்டோ மொபைல் சர்வீஸ் நிலையம், போட்டோ மற்றும் வீடியோ டிஜிட்டல் பிரிண்டிங் போன்ற தொழில்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் புதிதாக 95 தொழில்கள் தொடங்க ரூ.133 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

இவற்றில் 54 நிறுவனங்கள் ரூ.55 கோடியே 45 லட்சத்தில் தொழில்கள் தொடங்கி 656 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்த பகுதிகளில் தொடங்கப்பட்ட தொழில்களை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், மேலாளர் (கடனுதவி) வெங்கடேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story