மின்வெட்டால் இருளில் மூழ்கும் மலைக்கிராமம் குடிநீருக்காக தவிக்கும் மக்கள்


மின்வெட்டால் இருளில் மூழ்கும் மலைக்கிராமம் குடிநீருக்காக தவிக்கும் மக்கள்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-19T00:28:38+05:30)

சோலைக்காடு கிராமம் இந்த சோலைக்காடு கிராமத்தில் 300 வீடுகள் உள்ளன. சுமார் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயமே ஆகும். இதர மலைப்பகுதிகளை போன்று இங்கும் காபி, மிளகு ஆகியவை பிரதான பயிர்களாக இருக்கின்றன. இதைத்தவிர

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பன்றிமலை ஊராட்சியில் அமைந்துள்ளது சோலைக்காடு எனும் மலைக்கிராமம். அதன் பெயருக்கு தகுந்தது போன்று கிராமத்தை சுற்றிலும் பசுமை போர்த்திய மலையும், ஓங்கி உயர்ந்த மரங்களும் தான் காட்சி அளிக்கின்றன.

சோலைக்காடு கிராமம்

இந்த சோலைக்காடு கிராமத்தில் 300 வீடுகள் உள்ளன. சுமார் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயமே ஆகும். இதர மலைப்பகுதிகளை போன்று இங்கும் காபி, மிளகு ஆகியவை பிரதான பயிர்களாக இருக்கின்றன. இதைத்தவிர எலுமிச்சை, ஆரஞ்சு, வாழை, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

எனவே, இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். இந்த மக்களின் வசதிக்காக மாயப்பட்டி உள்பட 2 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர 2 திறந்தவெளி கிணறுகளும் உள்ளன.

மின்வெட்டு

இந்த குடிநீர் வினியோகத்தை பாழாக்கும் வகையில் சோலைக்காடு கிராமத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. சோலைக்காடு கிராமத்திற்கு சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ள எருமைக்கசம் பகுதியில் உள்ள டிராஸ்பார்மரில் இருந்து மின்சாரம் வருகிறது. மேலும் அதில் இருந்து பன்றிமலை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

மலைப்பிரதேசமாக இருப்பதால் அடிக்கடி கோளாறு உருவாகி மின்வெட்டு ஏற்படுகிறது. அவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யப்படுவது இல்லை. ஏறக்குறைய 3 நாட்கள் கழித்து தான் மின்வெட்டு சரிசெய்யப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர். அந்த வகையில் வாரத்தில் பாதிநாள் மின்சாரம் இல்லாமல் இருளில் தவிக்கும் நிலையில் தான் மக்கள் உள்ளனர்.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

மின்சாரம் இல்லாத நாட்களில் குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபடுகிறது. இதனால் கிராம மக்கள் திறந்தவெளி கிணறுகளில் உள்ள தண்ணீர் எடுத்து குடிநீராக பயன்படுத்தும் பரிதாபம் உள்ளது. இது சில நேரங்களில் வயிற்றுக்கோளாறு உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி, பலர் சிரமப்படுவதாக மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த மின்வெட்டை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் அல்லது மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இங்குள்ள மக்கள் நெடுநாள் கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேறவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் இங்குள்ள மெயின் தெருவில் சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுக்கழிப்பிட வசதி

அதேபோல் இங்கு பெண்களுக்கான பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக அந்த கழிப்பிடத்திற்கு அடிக்கடி தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக கழிப்பிடத்தில் எப்போது தண்ணீர் இருக்கும், எப்போது தண்ணீர் காலியாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பயன்பாடு இல்லாமல் பல நாட்கள் கழிப்பிடம் பூட்டியே கிடக்கிறது. மேலும் ஆண்களுக்கு பொதுக்கழிப்பிட வசதி இல்லை. இதனால் சாலையோரம் மற்றும் திறந்தவெளி இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் கிராம மக்களின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது.

மலைக்காலங்களில் மக்கள் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகி சிரமப்படுகின்றனர். இதை தடுக்க பெண் கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதோடு, ஆண்களுக்கு பொதுக்கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கூடுதல் பஸ் வசதி

மேலும் சோலைக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பன்றிமலை, ஆடலூர் கிராமங்களுக்கு தான் செல்ல வேண்டும். இந்த 2 கிராமங்களும் சோலைக்காட்டில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. ஆனால், சோலைக்காடு கிராமத்திற்கு காலை, மாலை நேரங்களில் தலா 2 முறை என தினமும் மொத்தம் 4 முறை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது.

மற்ற நேரங்களில் அவசர தேவைக்கு மோட்டார்சைக்கிளிலோ அல்லது கால்நடையாக தான் செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில விவசாயிகள் விளை பொருட்களை பஸ்களில் தான் சந்தைகளுக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால், போதுமான அளவு பஸ் வசதி இல்லாததால் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்க முடியாமலும், விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.

இதுதவிர பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு பஸ் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக சோலைக்காடு கிராமத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்பது கிராம மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

சாலை வசதி

இதேபோல் சோலைக்காடு கிராமத்திற்கு வரும் தார்சாலை 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. மலைச்சாலையாக இருப்பதோடு, அந்த வழியாக மரம் ஏற்றி செல்லும் லாரிகள் செல்வதால் சாலை விரைவில் சேதமாகி விட்டது. தற்போது சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது.

இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாக இருப்பதால், மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். பஸ்களில் செல்லும் போது கூட அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட எளிதாக வரமுடியாத நிலை உள்ளது.

மருத்துவ வசதி

மேலும் சோலைக்காடு கிராம விவசாயிகளுக்கு புல்லாவெளி பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், புல்லாவெளிக்கு சாலை வசதி இல்லை. இதனால் ஆபத்தான மலைப்பாதையை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சோலைக்காடு–புல்லாவெளி இடையே சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேல் சோலைக்காடு கிராமமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக பன்றிமலை அல்லது ஆடலூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. உரிய நேரத்திற்கு பஸ் இல்லாத நிலையில், 4 கி.மீ. தூரம் மலைச்சாலை வழியாக மருத்துவமனைக்கு செல்வதற்குள் மக்கள் பாடாதபாடுபட வேண்டியது இருக்கிறது. இரவு நேரத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும் நபர்கள், கர்ப்பிணிகள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் தவிக்கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:–

மருத்துவமனை வேண்டும்

தங்கராஜ் (விவசாயி):– அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் வாரத்திற்கு 3 நாட்கள் மின்சாரம் இல்லாமல் போய் விடுகிறது. இரவில் காட்டெருமை ஊருக்குள் புகுந்து விடும் நிலையில் மின்சாரம் இல்லாமல் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் அட்டை பூச்சுகள் கடிப்பதை கூட தடுக்கமுடியவில்லை. மின்சாரம் இல்லாமல் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. தடையில்லாத மின்சாரம் வழங்குவதோடு, கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும்.

ஆச்சியம்மாள்:– சாலை, சாக்கடை, மின்சாரம், மருத்துவம் என அனைத்து அடிப்படை வசதிகளும் கிராமத்தில் போதுமான அளவு இல்லை. இதனால் பெரும் சிரமமாக உள்ளது. மருத்துவத்திற்காக வெளியூருக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. பலருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில்லை. குடிநீர் வசதி இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இவ்வாறு கிராமமக்கள் கூறினர்.

ஒட்டுமொத்தமாக மின்வெட்டு இல்லாமல் தடையின்றி மின்சாரம், அதன்மூலம் சீரான குடிநீர் வினியோகம், சாலை, சாக்கடை, கழிப்பிடம், மருத்துவமனை அனைத்து அடிப்படை வசதிகளையும் மலைக்கிராம மக்களுக்கு செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

னவிலங்குகளால் சேதமாகும் பயிர்கள்

சோலைக்காடு பகுதியில் காட்டெருமைகள், பன்றிகள் அதிக அளவில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்கின்றன. வாழை, துவரை உள்பட அனைத்து பயிர்களையும் நாசப்படுத்துகின்றன. அந்த வகையில் வனவிலங்குகளால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் குறிப்பிட்ட அளவு நஷ்டம் அடைகின்றனர். இதை தடுப்பதற்கு விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களை சுற்றிலும் சேலைகளை வேலி போன்று அமைத்துள்ளனர். அதை கண்டு வனவிலங்குகள் மிரண்டு விடும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால், காட்டெருமைகள் சில நேரம் அதையும் தாண்டி சென்று பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதை தடுக்க வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறாமல் இருக்க சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒழுகும் பள்ளிக்கூடம்

சோலைக்காடு கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் மேற்கூரை சேதமாகி விட்டது. மழைக்காலத்தில் மாணவர்கள் உள்ளே அமர முடியாத அளவுக்கு ஒழுகுகிறது. அதை சரிசெய்ய ஆஸ்பெட்டாஸ் ஓடுகளை சொருகி வைத்துள்ளனர். எனினும், எந்த பலனும் இல்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலன்கருதி பள்ளிக்கூடத்திற்கு மேற்கூரையை மாற்ற வேண்டும்.


Next Story