கோவை வராத கோவை ரெயில்கள் 6 ரெயில்களுக்காக நடக்கும் போராட்டம்


கோவை வராத கோவை ரெயில்கள் 6 ரெயில்களுக்காக நடக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-19T00:56:31+05:30)

இரட்டை ரெயில் பாதை கோவைக்கு வட பகுதியிலிருந்து வரும் ரெயில் பாதை இரண்டாக பிரிகிறது. ஒரு பாதை இருகூர்–பீளமேடு–வடகோவை–கோவை மற்றும் இருகூர்–சிங்காநல்லூர்–போத்தனூர் என இரண்டு பாதைகளாக பிரிகின்றன. இவற்றில் இருகூரிலிருந்து கோவைக்கு வராமல் நேரே போத்தனூர் வழ

தென்னக ரெயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் கோட்டத்துக்குட்பட்ட கோவையை பல ஆண்டுகளாக ரெயில்வே நிர்வாகம் புறக்கணித்து வருகிறது என்பது நீண்ட காலமாக நிலவும் குற்றச்சாட்டு. பல கோரிக்கைகள் முன் வைத்தும் அவை தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டு வருவதால் தான் இந்த நிலை.

இரட்டை ரெயில் பாதை

கோவைக்கு வட பகுதியிலிருந்து வரும் ரெயில் பாதை இரண்டாக பிரிகிறது. ஒரு பாதை இருகூர்–பீளமேடு–வடகோவை–கோவை மற்றும் இருகூர்–சிங்காநல்லூர்–போத்தனூர் என இரண்டு பாதைகளாக பிரிகின்றன.

இவற்றில் இருகூரிலிருந்து கோவைக்கு வராமல் நேரே போத்தனூர் வழியாக கேரளாவுக்கு இரவு நேரங்களில் செல்லும் 13 ரெயில்களை கோவை வழியாக திருப்பிவிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இருகூர்–கோவை இடையே இரட்டை ரெயில் பாதை இல்லாததால் அது சாத்தியம் இல்லை என்று ரெயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து 2010–ம் ஆண்டில் இருகூர்–கோவை இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

திருப்பி விடப்படாத 6 ரெயில்கள்

ஆனால் அதன்பின்னரும் 13 ரெயில்களை கோவை வழியாக திருப்பி விட ரெயில்வே நிர்வாகம் மறுத்து வந்தது. இதற்கிடையில் கோவையில் உள்ள பொது நல அமைப்புகள் மற்றும் ரெயில்வே போராட்டக்குழுவினர் வலியுறுத்தியதின்பேரில் 13 ரெயில்களில் 7 ரெயில்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவை வழியாக திருப்பி விடப்பட்டது. ஆனால் மற்ற 6 ரெயில்கள் இன்னும் திருப்பி விடப்படாமல் உள்ளன.இவை அனைத்தும் கோவைக்குள் வந்து செல்வதால் கோவை ரெயில்கள் என்றே அழைக்கப்படுகின்றன.ஆனால் அவை கோவை ரெயில் நிலையம் வருவதில்லை. நேராக போத்தனூர் சென்று விடுகின்றன.

இதில் கோவை–திருவனந்தபுரம் மெயில் ரெயிலும், ஆலப்புழை–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலும் கோவை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தன. ஆனால் சென்னை–மங்களூர் மெயில்(தினமும்), சென்னை–மங்களூர் எக்ஸ்பிரஸ்(தினமும்), கொச்சுவேலி–ஹுப்ளி(வாராந்திர ரெயில்), சென்னை–திருவனந்தபுரம்(வாராந்திர ரெயில்), பெங்களூர்–எர்ணாகுளம்(வாரம் இரண்டு முறை), பெங்களூர்–எர்ணாகுளம்(வாராந்திர ரெயில்) ஆகிய 6 ரெயில்கள் மட்டும் கோவை வழியாக திருப்பி விடப்படாமல் உள்ளன.

கோவை மக்கள் தயக்கம்

சென்னையிலிருந்து வரும் சென்னை–மங்களூர் மெயில் போத்தனூர் ரெயில் நிலையத்துக்கு தினமும் அதிகாலை 3.57 மணிக்கு வருகிறது. ஆனால் அந்த நேரத்தில் போத்தனூர் ரெயில் நிலையத்தில் ஆள் நடமாட்டமே இருக்காது. மேலும் அந்த ரெயிலில் இறங்கி கோவை வரலாம் என்றாலும் அதற்கு அங்கு வாகன வசதி கிடையாது. மேலும் கோவையிலிருந்து கேரளா செல்ல விரும்புபவர்களும் போத்தனூர் சென்று தான் ரெயில் ஏற வேண்டும். அந்த நேரத்தில் போத்தனூர் ரெயில் நிலையத்தில் செல்வதற்கு வாகன வசதி கிடையாது. எனவே இந்த ரெயில் போத்தனூரில் நிற்பதால் அதை கோவை மக்கள் யாரும் விரும்புவதில்லை.

இதேபோல மங்களூரிலிருந்து சென்னை–மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் போத்தனூருக்கு தினமும் நள்ளிரவு 12.45 மணிக்கு வருகிறது. கேரளாவிலிருந்து கோவை வரலாம் என்று நினைப்பவர்கள் அந்த ரெயிலில் போத்தனூரில் இறங்கி கோவை வர முடியாத அளவிற்கு வாகன வசதி கிடையாது. குடும்பத்துடன் வருபவர்கள் நள்ளிரவு நேரங்களில் போத்தனூரிலிருந்து கோவை வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.

பயணிகள் விரும்புவதில்லை

கர்நாடகாவின் வடபகுதிக்கு கோவை மக்கள் செல்வதற்கு வசதியாக உள்ள ஒரே ரெயில் ஹூப்ளி–கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் தான். ஆனால் அந்த ரெயிலும் கோவைக்கு வராமல் நேரே போத்தனூருக்கு செல்வதால் அதில் யாரும் ஏறுவதில்லை. அந்த ரெயில் ஹூப்ளியிலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்துக்கு தினமும் வருகிறது. ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் அந்த ரெயில் போத்தனூருக்கு வருவதால் அதில் யாரும் ஏறுவது கிடையாது.

இதே போல கொச்சுவேலியிலிருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி செல்லும் எக்ஸ்பிரஸ் இரவு 9 மணிக்கு போத்தனூர் வருகிறது. இதுவும் மக்கள் பயணம் செய்வதற்கு ஏற்ற நேரமாக இல்லாமல் இருப்பதால் அதை பயணிகள் யாரும் பயன்படுத்துவதில்லை.

சென்னையிலிருந்து வாரத்துக்கு ஒருநாள் திருவனந்தபுரம் செல்லும் சென்னை–திருவனந்தபுரம் ரெயில் இரவு 10.30 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்துக்கு வருகிறது. இதேபோல திருவனந்தபுரத்திலிலிருந்து சென்னை செல்லும் வாராந்திர ரெயில் அதிகாலை 4.45 மணிக்கு போத்தனூர் வருகிறது. கோவையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கேரள மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து கோவை வருவதற்கு வசதியான ரெயில் இது. ஆனால் அந்த ரெயில் போத்தனூரில் நிற்பதால் அதை பெரும்பாலான பயணிகள் விரும்புவதில்லை.

கூடுதல் நடைமேடைகள்

பெங்களூரு–எர்ணாகுளம் இடையே வாரத்துக்கு இரண்டு முறை செல்லும் ரெயில் போத்தனூர் ரெயில் நிலையத்துக்கு இரவு 9 மணிக்கு தான் வருகிறது. இதேபோல எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு வாரத்துக்கு இரண்டு முறை செல்லும் ரெயில் இரவு 8.50 மணிக்கு போத்தனூர் வருகிறது. இந்த இரண்டு ரெயில்களையும் கோவை வழியாக திருப்பி விட்டால் கோவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோவையை சேர்ந்தவர்கள் ஏராளமான பேர் பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் வேறு பல நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் விடுமுறை நாட்களில் கோவை வருவதற்கு ஏற்ற ரெயிலாக இந்த ரெயில் உள்ளது.

மேலும் பெங்களூரு–எர்ணாகுளம் இடையே செல்லும் வாராந்திர ரெயில் போத்தனூர் ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 1.45 மணிக்கு போத்தனூர் வருகிறது. இதுவும் பெங்களூருவில் வேலைபார்க்கும் கோவையை சேர்ந்தவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

இருகூரிலிருந்து போத்தனூர் செல்லும் ரெயில்களை கோவை வழியாக திருப்பி விட்டால் ரெயில்கள் நேரத்தில் தாமதம் ஏற்பட்டு மற்ற ரெயில்கள் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இருகூர்–கோவை இடையே 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதை உள்ளதால் இருகூர் வந்த பின்னர் அந்த 6 ரெயில்களும் தடையின்றி கோவை ரெயில் நிலையத்தை வந்தடைய முடியும். கோவை ரெயில் நிலையத்தில் அந்த ரெயில்கள் 2 முதல் 5 நிமிடங்கள் வரை தான் நிற்க வேண்டியதிருக்கும். இதனால் அந்த ரெயில்களுக்கு காலதாமதம் எதுவும் ஏற்படாது. கோவை ரெயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. கூட்ஸ் ரெயில் வந்தாலும், கேரளாவிலிருந்து வேறு ரெயில்கள் வந்தாலும் மாற்றி விடுவதற்கு கூடுதல் நடைமேடைகள் உள்ளன. மொத்தம் உள்ள 6 நடைமேடைகளில் 4 நடைமேடைகள் இரவில் ரெயில்கள் இல்லாமல் காலியாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கோவை ரெயில் நிலையத்தில் முன்பு இருந்த கத்தரி ரெயில்பாதை அகற்றப்பட்டு விட்டதால் ரெயிலை ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாற்றி விடுவது சுலபம் என்று கோவை ரெயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்.

காத்திருக்க வேண்டியதில்லை

ஆனால் இருகூர்–போத்தனூர் இடையே ஒரு ரெயில் பாதை தான் உள்ளது. இரட்டை ரெயில் பாதை கிடையாது. இதனால் கேரளாவிலிருந்தோ. வடபகுதியிலிருந்தோ இரவு நேரத்தில் கூட்ஸ் ரெயில் எதிர்பாராத வகையில் வந்தால் அதற்காக இருகூர் ரெயில் நிலையத்தில் தான் பயணிகள் ரெயில்களை நிறுத்த வேண்டியிருக்கும். அங்கு இரண்டு ரெயில் பாதைகள் தான் உள்ளன. கூட்ஸ் ரெயில் சென்ற பின்னர் தான் இருகூரில் நிறுத்தப்பட்டிருக்கும் பயணிகள் ரெயில்கள் செல்ல முடியும். ஆனால் 6 ரெயில்களையும் கோவை வழியாக திருப்பி விட்டால் கூட்ஸ் ரெயிலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் கோவை ரெயில் நிலையத்தில் கூடுதல் ரெயில் பாதைகள் உள்ளன. இதனால் கூட்ஸ் ரெயிலுக்காக பயணிகள் ரெயில் காத்திருக்க வேண்டியதில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 6 ரெயில்களையும் கோவை வழியாக திருப்பி விட்டால் கோவை மக்களுக்கு கூடுதல் ரெயில் வசதி கிடைப்பதோடு மட்டுமல்லாமல் ரெயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும். கோவை ரெயில் நிலையம் போன்று போத்தனூர் ரெயில் நிலையத்தில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது. அங்கு இரவு நேரங்களில் கடைகள் கிடையாது. போக்குவரத்து வசதியும் இல்லை. ஆனால் கோவை ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். கடைகள் உண்டு. போக்குவரத்து வசதியும் உள்ளது. எனவே இரவு நேரங்களில் ரெயிலில் வருபவர்கள் கோவை ரெயில் நிலையத்தில் இறங்குவதைத் தான் விரும்புவார்கள்.

இருகூரிலிருந்து போத்தனூர் வழியாக இரவு நேரத்தில் செல்லும் 6 ரெயில்களையும் கோவை வழியாக திருப்பி விட்டால் கோவைக்கு நிறைய பயணிகள் டிக்கெட் எடுப்பார்கள். இதனால் ரெயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே கோவை மக்களுக்கும், ரெயில்வே நிர்வாகத்துக்கும் பலன் விளைவிக்கும் வகையில் 6 ரெயில்களையும் கோவை வழியாக திருப்பி விட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

6 ரெயில்களையும் கோவை வழியாக திருப்பிவிடாவிட்டால் போராட்டம் ரெயில்வே போராட்டக்குழு தலைவர் எச்சரிக்கை

கோவை ரெயில்வே போராட்டக்குழு தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:–

இருகூர்–கோவை இடையே இரட்டை ரெயில்பாதை இல்லை என்பதை காரணம்காட்டி இரவு நேரங்களில் போத்தனூர் வழியாக சென்று கொண்டிருந்த 13 ரெயில்களையும் கோவை வழியாக திருப்பிவிடாமல் ரெயில்வே நிர்வாகம் மறுத்து வந்தது. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும் டெல்லிக்கு சென்று மத்திய மந்திரியிடமும் மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 7 ரெயில்கள் கோவை வழியாக திருப்பி விடப்பட்டன. ஆனால் அந்த ரெயில்களில் 2 ரெயில்களை தவிர மற்ற ரெயில்களினால் கோவை மக்களுக்கு பலன் கிடையாது. மீதி 6 ரெயில்களையும் கோவை வழியாக திருப்பி விட ரெயில்வே நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.

கோவை வழியாக திருப்பி விட்டால் 6 ரெயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 6 ரெயில்களையும் கோவை வழியாக திருப்பி விட்டால் கேரளாவிற்கு வழங்கப்படும் இருக்கை ஒதுக்கீட்டில் குறைந்து விடும் என்பதால் ரெயில்கள் திருப்பி விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே போத்தனூர் செல்லும் 6 ரெயில்களையும் உடனடியாக கோவை வழியாக திருப்பி விட வேண்டும். இல்லையென்றால் கோவையில் உள்ள அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story