மேட்டூர் அணை நீர்மட்டம் 38.51 அடியாக குறைந்தது


மேட்டூர் அணை நீர்மட்டம் 38.51 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 18 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-19T01:05:29+05:30)

மேட்டூர், மேட்டூர் அணை நீர்மட்டம் 38.51 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை தமிழகத்தில் பருவமழை கை கொடுக்கவில்லை. இதனால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட அனை

மேட்டூர்,

மேட்டூர் அணை நீர்மட்டம் 38.51 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணை

தமிழகத்தில் பருவமழை கை கொடுக்கவில்லை. இதனால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பாசன தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதையொட்டி சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி பாசனதேவையை பூர்த்தி செய்து கொள்ளும்படி விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.

நீர்வரத்து குறைந்தது

பருவமழை கை கொடுக்காத நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி முழுமையாக தண்ணீர் தமிழகத்திற்கு அளிக்கப்படவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.

அடுத்த பருவமழை காலமான ஜூன் மாதம் வரை மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பை பயன்படுத்தியே குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டும். இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கடந்த நவம்பர் மாதம் முதல் வினாடிக்கு 750 கனஅடியாக குறைக்கப்பட்டது.

38.51 அடி

இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 100 கனஅடிக்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வழக்கம் போல் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 38.51 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 79 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Next Story