பனைமரங்கள் எண்ணிக்கை குறைந்ததால் குன்னத்தூர் பகுதியில் கருப்பட்டி உற்பத்தி பாதிப்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


பனைமரங்கள் எண்ணிக்கை குறைந்ததால் குன்னத்தூர் பகுதியில் கருப்பட்டி உற்பத்தி பாதிப்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:15 PM GMT (Updated: 2016-12-19T01:08:01+05:30)

கருப்பட்டி சம்மேளனம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் செயல்பட்டு வருகிறது. வாரம்தோறும் இங்கு நடைபெறும் மார்க்கெட்டில் பனங்கருப்பட்டி, தென்னங்கருப்பட்டி விற்பனை அதிகளவில் நடைபெற்று வ

மனிதனின் முயற்சி இல்லாமல் இயற்கையாகவே வளரும் தன்மை கொண்டது பனை மரங்கள், அது மனிதனுக்கு தேவையான பலவற்றை கொடுத்து உதவி வருகிறது. மனிதர்களுக்கு பல விதங்களில் உதவி வரும் பனை மரங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து

கருப்பட்டி சம்மேளனம்

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் செயல்பட்டு வருகிறது. வாரம்தோறும் இங்கு நடைபெறும் மார்க்கெட்டில் பனங்கருப்பட்டி, தென்னங்கருப்பட்டி விற்பனை அதிகளவில் நடைபெற்று வந்தது. இதற்காக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து கருப்பட்டி வாங்கிச்சென்றனர். ஆனால் பனை ஏறும் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சமீபகாலமாக கருப்பட்டி உற்பத்தி குறைந்து வருவதால் இந்த கருப்பட்டி சந்தை தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.

பிரசித்தி பெற்ற இந்த சம்மேளனத்தை கடந்த 25–1–1953–ல் பதிவு செய்யப்பட்டு அன்றே வேலை தொடங்கி இதுவரை செயல்பட்டு வருகிறது. சிறிதாக இருந்த கட்டிடம் தென்னை மற்றும் பனங்கருப்பட்டி இருப்பு வைக்க நவீன வசதிகளுடன் 2 அடுக்கு மாடி கட்டிடமாக கட்டப்பட்டது. அதை 1965–ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்–அமைச்சராக இருந்த காமராஜர் திறந்துவைத்தார். படிப்படியாக உயர்ந்து கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் குன்னத்தூர், பல்லகவுண்டன்பாளையம், தாராபுரம், சிறுவலூர், பெருந்துறை, அவல்பூந்துறை, கோவை, பொள்ளாச்சி, நம்பியூர், சென்னிமலை, காங்கேயம், மூலனூர், அவினாசி, வெள்ளிதிருப்பூர், உடுமலை போன்ற பகுதிகளிலும் கிளைகள் அமைக்கப்பட்டன. அதன் மூலம் ஆங்காங்கே பெறப்படும் கருப்பட்டிகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுடெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது.

கோவை காந்திபுரம் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களில் சில்லரை விற்பனை கடைகள் தொடங்கி பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பதநீர் மற்றும் ஓலைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. 3 மாவட்டங்களிலும் 249 ஆரம்ப கருப்பட்டி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்தன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியே வாழ்ந்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் பனை மற்றும் தென்னை பதநீர் இறக்குவோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 16 பேர், பதநீர் காய்ச்சுவோர் 34 ஆயிரத்து 929 பேர், பதநீர் விற்பனையாளர் 3 ஆயிரத்து 987 பேர், பனைப்பொருட்கள் விற்பனை செய்வோர் 12 ஆயிரத்து 261 பேர் என குறைய ஆரம்பித்தது.

காய்ந்த பனை மரங்கள்

தற்போது பனை தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் கோவை மாவட்டத்தில் 122 பேர், திருப்பூர் மாவட்டத்தில் 142 பேர், ஈரோடு மாவட்டத்தில் 664 பேர் என மொத்தம் 928 பேர் என்று குறைந்துள்ளது. கடந்த 20 வருடத்திற்கு முன்பு குன்னத்தூர் கூட்டுறவு கருப்பட்டி சம்மேளனத்தில் 100 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது 3 ஊழியர்கள் பணியில் உள்ளனர். பனங்கருப்பட்டி என்று சொல்லக்கூடிய பனை வெல்லம் உடல் சூட்டை குறைக்கும், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திற்கும், புகையிலை பதப்படுத்தவும் பயன்படுகிறது. இயற்கை பானமான பதநீர் கால்சியம் சத்து நிறைந்தது. பனங்கற்கண்டு குளிர்ச்சி தன்மை நிறைந்தது. உடல் ஆரோக்கியத்திற்கும், மருந்து பொருட்கள் தயார் செய்யவும் பயன்படுகிறது. சுக்கு கருப்பட்டி அஜீரணத்தை நீக்கக்கூடியது. சுக்கு காப்பி தயாரிக்க பயன்படுகிறது.

கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் தற்போது 10–ல் ஒரு பங்கு பனைமரம் தான் உள்ளது. பல வருடங்களாக போதுமான மழை இல்லாததால் காய்ந்த நிலையில் பனை மரங்கள் குறைவான பதநீரை தான் கொடுக்கிறது. குன்னத்தூர் கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனத்திற்கு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல ஊர்களில் பலகோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், கட்டிடங்கள் உள்ளது. பல இடங்களில் கணிசமான வாடகையும் வந்து கொண்டிருக்கிறது.

காப்பாற்ற வேண்டும்

அழிவில் இருந்து பனை தொழிலை காக்க இன்னும் அதிகமான குளம், குட்டை, மண் அரிப்பு உள்ள இடங்களில் பனை மரங்களை நட வேண்டும். பனை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினால் பனைத்தொழில் மேன்மையடைய வாய்ப்புள்ளது. கருப்பட்டியை சத்துணவு திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம், சம்மேளனத்திற்கு வருமானம் பெருக வாய்ப்புள்ளது. சம்மேளனத்தின் கருப்பட்டி கொள்முதல் குடோன் மிகவும் பழுதடைந்து உள்ளது. அதனை பழுதுபார்க்க அரசு மானியம் வழங்கும் பட்சத்தில் கருப்பட்டி கொள்முதல் இருப்பு அதிகம் வைக்கவும் வியாபாரம் பெருகவும் அதிக வாய்ப்பு உள்ளது. சம்மேளன கட்டுப்பாட்டில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டி முழுவதும் வேளாண்மை துறையில் வாட் வரி விதிப்பது போல் கருப்பட்டி வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரி விதித்து ஆணை வழங்கினால் சம்மேளனம் லாபத்தில் இயங்கும்.

குன்னத்தூர் அருகே சுள்ளிசுரட்டை சேர்ந்த பனை தொழிலாளி சென்னியப்பன் கூறியதாவது:–

எங்கள் தலைமுறையுடன் பனை ஏறும் தொழில் மறைந்துவிடும். பனை மரங்கள் அழிவின் பிடியில் காய்ந்த நிலையில் உள்ளது. பனை ஏறும் தொழிலாளியை எந்த பெண்ணும் திருமணம் செய்வதில்லை. அதனால் இப்போதையை இளைஞர்கள் பனை ஏறும் தொழிலை விட்டு விட்டு வெவ்வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். இந்த பகுதியில் கடந்த பல வருடங்களாக சரியான மழை பெய்யாததால் பெரும்பாலான பனை மரங்களில் எதிர்பார்த்த அளவு பதநீர் கிடைப்பதில்லை. பனை மரங்கள் மற்றும் பனைத்தொழிலை காப்பாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story