நீலாங்கரை அருகே மரத்தில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு 5 கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர்


நீலாங்கரை அருகே மரத்தில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு 5 கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 18 Dec 2016 9:30 PM GMT (Updated: 18 Dec 2016 8:12 PM GMT)

நீலாங்கரை அருகே மரத்தில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். கார் தீப்பிடித்து எரிந்தது சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜோஸ்வான் (வயது 20). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தன

ஆலந்தூர்

நீலாங்கரை அருகே மரத்தில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

கார் தீப்பிடித்து எரிந்தது

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜோஸ்வான் (வயது 20). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், தனது நண்பர்களான முகேஷ், ஜோயல், ரியாஸ், ஜெகதீஷ் ஆகியோருடன் காரில் முட்டுகாடு நோக்கி சென்றார்.

நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அவர்கள் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய கார், அருகில் இருந்த குடிசை வீட்டுக்குள் புகுந்தது.

அப்போது காரின் என்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. மளமளவென குடிசை வீட்டுக்கும் தீ பரவியது.

காயத்துடன் உயிர் தப்பினர்

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, காருக்குள் சிக்கிய 5 மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். மரத்தில் கார் மோதியதில் காயம் அடைந்த அவர்கள் அனைவரும் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவான்மியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார் மற்றும் குடிசை வீட்டில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். தீ விபத்தில் கார் மற்றும் குடிசை வீடு எரிந்து சாம்பலானது.

காருக்குள் சிக்கிய கல்லூரி மாணவர்களை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டதால் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story