சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 58 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்


சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 58 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்
x
தினத்தந்தி 18 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-19T02:16:13+05:30)

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 58 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்

தஞ்சாவூர்,

தஞ்சையில் நடந்த சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 58 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

உரிமைகள் தின விழா

தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா தஞ்சையில் நேற்று நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணி வரவேற்றார். கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ரெங்கசாமி எம்.எல்.ஏ., மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் மற்றும் பரிசுத் தொகையாக 13 பேருக்கு ரூ.37 ஆயிரமும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல உதவியாக 3 பயனாளிகளுக்கு ரூ.4 ஆயிரமும், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ.75 ஆயிரத்து 270 மதிப்பிலான தையல் எந்திரம், கிரைண்டர், சிறு வணிக உதவி தொகைகளும் வழங்கப்பட்டன. மேலும் நரிக்குறவர் நல வாரியம் மூலம் 26 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான உதவி தொகைகளும், சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்களும் என மொத்தம் 58 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்து 270 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கலெக்டர் அண்ணாதுரை பேச்சு

நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:-

சிறுபான்மையினர் நலனுக்காக ஐக்கியநாடு சபையில் 1992 டிசம்பர் 18-ந் தேதி, சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா அறிவிக்கப்பட்டு நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இங்கு பெரும்பான்மையாக உள்ள நாம் வேறு இடங்களுக்கு வேலை நிமித்தமாக செல்லும் பொழுது அங்கு நாம் சிறுபான்மையினராக மாறி விடுகின்றோம். இந்திய நாட்டில் பொருளாதாரம் மேன்மை அடைய அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமாக இது சாத்தியமடைக்கின்றது.

அதே போல், தமிழ் சமுதாயத்திற்கு சமணர்களும், பவுத்தர்களும் சங்க காலங்களிலும், மொழியின் நலனுக்காக கிறிஸ்தவர்களும், முஸ்லிம் சமுதாயத்தினரும், ஜி.யூ.போப், காயிதே மில்லத் போன்றவர்கள் தமிழ் இலக்கியங்களில் பல படைப்புகளை செய்து உள்ளனர். சிறுபான்மையினர் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு அத்திட்டங்களை பெற்று சமூகத்தில் மேன்மையடைய கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ், கோவிந்தராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயினுலாபுதீன், சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் உதயகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை அலுவலர் செல்வம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கவுரவ செயலாளர் கலந்தர், புனித சேவியர் தொழிற்பயிற்சி நிலைய தாளாளர் பால்ராஜ், கத்தோலிக்க சங்க மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி கணக்கு அலுவலர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.


Next Story