தண்ணீர் இன்றி கருகும் பயிர்கள்: வயல்களில் ஆடு, மாடுகளை மேயவிடும் அவலம்


தண்ணீர் இன்றி கருகும் பயிர்கள்: வயல்களில் ஆடு, மாடுகளை மேயவிடும் அவலம்
x
தினத்தந்தி 18 Dec 2016 10:45 PM GMT (Updated: 2016-12-19T02:18:27+05:30)

தண்ணீர் இன்றி கருகும் பயிர்கள்: வயல்களில் ஆடு, மாடுகளை மேயவிடும் அவலம்

திட்டச்சேரி,

தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் வயல்களில் ஆடு, மாடுகளை மேய விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சம்பா சாகுபடி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை வைத்து குறுவை சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து சரிவர தண்ணீர் திறந்துவிடப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்து போனது. அதேபோல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பொய்த்து போனதால் திருமருகல் ஒன்றியத்தில் நடப்பாண்டு பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரையும், வடகிழக்கு பருவமழையையும் நம்பியே விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்கு வந்து சேராததால், விவசாயிகள் நெல் விதைத்த பருவத்தில் பெய்த மழையின் காரணமாக பயிர்கள் முளைத்துவிட்டன. அதைதொடர்ந்து அவ்வப்போது பெய்த மழையினால் பயிர்கள் ஓரளவுக்கு முளைத்து வந்தன.

ஆடு, மாடுகள் மேயும் அவலம்

ஆனால் தொடர்ந்து பருவமழையும் கைவிட்டதால் திருமருகல் ஒன்றியம் திருமருகல், திட்டச்சேரி, மரைக்கான்சாவடி, திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், திருப்புகலூர், ஏனங்குடி, ஆதலையூர், பாக்கம்கோட்டூர், வடகரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் முற்றிலும் கருக தொடங்கின. இதனால் மதவேதனையடைந்த விவசாயிகள் தங்களது வயல்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களை ஆடு, மாடுகளை மேயவிட்டுள்ளனர். திருமருகல் ஒன்றியத்தில் தண்ணீர் இன்றி கருகும் பயிர்களால் வயல்களில் ஆடு, மாடுகளை மேயவிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.


Next Story