பெங்களூருவில், ஏ.டி.எம்.களில் நிரப்ப எடுத்துச் சென்ற போது கடத்தல் ரூ.20 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்– வேன் மீட்பு தலைமறைவான அசாம் டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூருவில், ஏ.டி.எம்.களில் நிரப்ப எடுத்துச் சென்ற போது கடத்தல் ரூ.20 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்– வேன் மீட்பு தலைமறைவான அசாம் டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Dec 2016 11:18 PM GMT (Updated: 18 Dec 2016 11:17 PM GMT)

பெங்களூருவில் ஏ.டி.எம்.களில் நிரப்ப எடுத்துச் சென்ற போது கடத்தப்பட்ட வேனும், ரூ.20 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் மீட்கப்பட்டது. தலைமறைவான அசாம் மாநிலத்தை சேர்ந்த டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள் . பெங்களூருவில் மற்றொரு சம்பவம் பெங்க

பெங்களூரு

பெங்களூருவில் ஏ.டி.எம்.களில் நிரப்ப எடுத்துச் சென்ற போது கடத்தப்பட்ட வேனும், ரூ.20 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் மீட்கப்பட்டது. தலைமறைவான அசாம் மாநிலத்தை சேர்ந்த டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்

. பெங்களூருவில் மற்றொரு சம்பவம்

பெங்களூரு பிரேசர்டவுன் அருகே காக்ஸ் டவுனில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்த தமிழ்நாட்டை சேர்ந்த டுமினிக் ராய் கடந்த மாதம் (நவம்பர்) 23–ந் தேதி ஏ.டி.எம்.களில் நிரப்ப எடுத்துச் சென்ற ரூ.1.37 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்த வேனுடன் தலைமறைவானார். பின்னர் டுமினிக் ராய், அவரது மனைவியை கைது செய்ததுடன், பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். இந்த சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ஏ.டி.எம்.களில் நிரப்ப எடுத்துச் சென்ற பணத்துடன் இருந்த வேனை டிரைவர் கடத்திச் சென்ற மற்றொரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:–

அசாம் மாநில டிரைவர்

பெங்களூரு மடிவாளாவில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வங்கிகளில் பணத்தை பெற்று, அதனை அந்த வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்.களில் நிரப்பும் பணியை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தில் டிரைவராக அசாம் மாநிலத்தை சேர்ந்த உசேன் மசூம்தர் (வயது 26) என்பவர் வேலை செய்தார். நேற்று முன்தினம் மதியம் அந்த பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் ரூ.52 லட்சத்தை எடுத்துக் கொண்டு நகரில் உள்ள வெவ்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்றனர்.

அந்த வேனை டிரைவர் உசேன் ஓட்டிச் சென்றார். அவருடன் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி மற்றும் பாதுகாவலர் உடன் சென்றிருந்தனர். கோரமங்களாவில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் ரூ.2 லட்சத்தை அதிகாரி நிரப்பினார். பின்னர் ரூ.50 லட்சத்துடன் எச்.ஏ.எல். அருகே பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்ப சென்றனர்.

ரூ.20 லட்சத்துடன் வேன் கடத்தல்

பழைய விமான நிலைய ரோட்டில் வேனை நிறுத்திவிட்டு, அங்குள்ள 2 ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்புவதற்காக ரூ.50 லட்சத்தில் ரூ.30 லட்சத்தை வங்கி அதிகாரியும், பாதுகாவலரும் எடுத்துச் சென்றனர். அப்போது வேனிலேயே டிரைவர் உசேன் இருந்தார். இந்த நிலையில், திடீரென்று ரூ.20 லட்சம் இருந்த வேனை பழைய விமான நிலைய ரோட்டில் இருந்து டிரைவர் உசேன் கடத்தி சென்று விட்டார்.

ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பிவிட்டு வெளியே வந்த அதிகாரியும், பாதுகாவலரும் வேன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் ரூ.20 லட்சத்துடன் வேனை டிரைவர் கடத்திச் சென்றிருந்ததும் தெரியவந்தது. அந்த வேனில் ரூ.20 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி உடனடியாக அவர்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்கள். மேலும் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறினார்கள்.

வேன் சிக்கியது

அதைத்தொடர்ந்து, வேனுடன் கடத்தப்பட்ட ரூ.20 லட்சத்தை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள். கடத்தப்பட்ட வேனில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இதனால் அந்த கருவி மூலம் வேன் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கினார்கள். இந்த நிலையில், ஏர்போர்ட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எமலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அந்த வேன் நிற்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள்.

அப்போது அங்குள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வேன் நிற்பதை போலீசார் கண்டுபிடித்தார்கள். அந்த வேனில் சோதனை செய்த போது ரூ.20 லட்சம் இருந்த இரும்பு பெட்டியை காணவில்லை. இதனால் வேனை விட்டுவிட்டு ரூ.20 லட்சத்துடன் டிரைவர் உசேன் தலைமறைவானது தெரியவந்தது. அந்த வேனை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

டிரைவருக்கு வலைவீச்சு

மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் ரூ.20 லட்சத்துடன் தலைமறைவான டிரைவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி பெங்களூருவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தலைமறைவான டிரைவர் உசேன் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் பணத்துடன் ரெயில் அல்லது பஸ்சில் பெங்களூருவில் இருந்து தப்பிச் செல்லலாம் என கருதி பஸ், ரெயில் நிலையங்களில் சென்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்கவில்லை. ஆனாலும் அவரை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டனர்.

ரூ.20 லட்சம் மீட்பு

இந்த நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் எச்.எஸ்.ஆர். லே–அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெல்லந்தூர் சர்க்கிள் அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு இரும்பு பெட்டி கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தார்கள். பின்னர் அவர்கள் எச்.எஸ்.ஆர். லே–அவுட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த இரும்பு பெட்டியை மீட்டார்கள். அப்போது அந்த இரும்பு பெட்டி டிரைவர் உசேன் கடத்திச் சென்றது என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதுபற்றி உடனடியாக ஏர்போர்ட் போலீசாருக்கு எச்.எஸ்.ஆர். லே–அவுட் போலீசார் தகவல் கொடுத்தார்கள். உடனே அவர்கள் விரைந்து வந்து அந்த இரும்பு பெட்டியை திறந்து பார்த்த போது உசேன் கடத்திச் சென்றிருந்த ரூ.20 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. கடத்தப்பட்ட வேன், ரூ.20 லட்சம் மீட்கப்பட்டுள்ளதால் தலைமறைவாக உள்ள உசேனை ஏர்போர்ட் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story